FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கர்நாடக தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: 12-இல் வாக்குப்பதிவு; 15-இல் வாக்கு எண்ணிக்கை

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை (மே 10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி.
பகிர்:

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை (மே 10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந் நிலையில், ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் மரணம் அடைந்ததால், அந்த தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 223 தொகுதிகளுக்கு மே 12-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் மே 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. இத் தேர்தலில்காங்கிரஸ், பாஜக, மஜத, பகுஜன்சமாஜ், சிபிஐ, சிபிஎம், எம்இபி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
வேட்பாளர்கள்: இத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்.17 தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3,509 வேட்பாளர்கள் 4,886 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 271 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வேட்புமனுக்களின் மொத்த எண்ணிக்கை 3,238 ஆக இருந்தது. இந்நிலையில், வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு,583 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிக்கொண்டு வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து, தேர்தல் களத்தில் மொத்தம் 2,655 வேட்பாளர்கள் உள்ளனர். ஜெயநகர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் நீங்கலாக, மொத்தம் 2636 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் சார்பில் 222, பாஜக சார்பில் 223, மஜத சார்பில் 200, பகுஜன்சமாஜ் சார்பில் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1214 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 
தலைவர்கள் முற்றுகை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தத்தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ், பாஜக, மஜத, பகுஜன் சமாஜ் தலைவர்கள் வெயிலையும் பொருள்படுத்தாமல் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு திரட்டிவருகிறார்கள். தலைவர்களின்முற்றுகையால் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
காங்கிரஸ்: காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், பி.கே.ஹரிபிரசாத், மகாராஷ்டிரமாநில முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் செளஹான், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், செயல்தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், எஸ்.ஆர்.பாட்டீல், அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு திரட்டிவருகிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சில நாள்களுக்கு முன் பெங்களூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மத்திய பாஜக அரசின் தோல்விகள் குறித்து கருத்துகளை தெரிவித்துச் சென்றார். கடந்த பிப்.24-ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்துவந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி, தனது பிரசாரத்தை பெங்களூரில் புதன்கிழமை நிறைவுசெய்தார். சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. முதல்வர் சித்தராமையா, மைசூரு, மண்டியா, சாமராஜ்நகர் மாவட்டங்களில் முகாமிட்டு, வியாழக்கிழமை தனது கடைசிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார்.
பாஜக: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மே 1-ஆம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடி, தனது 9 நாள்கள் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்தார். கடந்த 9 நாள்களில் மாநிலத்தின் 25 மாவட்டங்களிலும் 25 பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார். பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, கடந்த 2 மாதங்களாக கர்நாடகத்தில் முகாமிட்டு பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்துவருகிறார். இவர்களைத் தவிர, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவடேகர், அனந்த்குமார், சதானந்த கெளடா உள்ளிட்டோர் பிரசாரம் செய்துள்ளனர். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செளஹான், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா போன்ற தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்று பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
மஜத: மஜத வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் தேசியத் தலைவர் தேவெ கெளடா அனைத்து மாவட்டங்களிலும்பிரசாரம் செய்தார். மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னாள் அமைச்சர்கே.பி.முனுசாமி, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எம்.பி.யுவராஜ், இணைச்செயலாளர் எஸ்.டி.குமார் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். 
பிரசாரம் ஓய்கிறது: வாக்குப் பதிவு மே 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுவதால், பிரசாரங்கள் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கின்றன. அதன்பிறகு, வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கலாம்.

பெங்களூருவில் காங்கிரஸுக்கு ஆதரவாக புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments