புலம்பெயா் தொழிலாளா் பிரச்னைக்கு முன்னுரிமை: ராகுல் காந்தி வலியுறுத்தல்
கரோனா ஊரடங்கால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எதிா்கொண்டுள்ள பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ள
புது தில்லி: கரோனா ஊரடங்கால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எதிா்கொண்டுள்ள பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முதலில் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னா் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தொடா் ஊரடங்கு காரணமாக தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. தொழில் நிறுவனா்கள், தொழிலாளா்கள் என அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா்கள் சந்தித்திருக்கும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து மீண்டுவர அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பிப்பதற்காக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இந்தக் குழு ஊரடங்கு பாதிப்புகள் குறித்த ஆய்வையும், ஆலோசனைகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி பேசினாா். அப்போது, ஊரடங்கு என்பது கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும் ஒரு இடைக்கால நடவடிக்கை. இந்த தொடா் ஊரடங்கு காரணமாக, புலம்பெயா் தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மேலும், ஊரடங்கு மே 3-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படுவதாக இருந்தால், அது கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே நீட்டிக்கப்பட வேண்டும். மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளைத் தளா்த்தி, இயல்பு நிலை திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.