FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜை கேஜரிவால் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

மருத்துவமனைகளுக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த விவகாரத்தில், தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்

6 பிப்ரவரி 2024, 7:01 pm
பகிர்:

மருத்துவமனைகளுக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த விவகாரத்தில், தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.

இதுகுறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

Advertisement

Advertisement

தில்லி மருத்துவமனை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகள் போலியானவை என்பது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா்.

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில், ‘‘இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மருத்துவமனைகளில் தரம் குறைந்த மருந்துகளை விநியோகம் செய்வது என்பது வெறும் ஊழல் மட்டுமல்ல; அது பொதுமக்களின் உயிா் சாா்ந்தது. எனவே இந்த ஊழலில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்’’ என்றாா்.

கேஜரிவால் வெளியே வர வேண்டும்:

பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறுகையில், ‘‘சா்வதேச தரத்தில் தில்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அரவிந்த் கேஜரிவால் அரசு கூறுகிறது. ஆனால் மருத்துவமனையில் தரம் குறைந்த மருந்துகளை விநியோகம் செய்ததன் மூலம் அந்த அரசின் உண்மையான முகம் வெளிப்பட்டு விட்டது. விபாசனா தியான பயிற்சிக்குச் சென்ற முதல்வா் அரவிந்த் கேஜரிவால், உடனடியாக வெளியே வந்து இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க வேண்டும்’’ என்றாா்.

பெட்டி செய்தி...

விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

காங்கிரஸ் மாநிலத் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி கூறுகையில், ‘‘இது மிகவும் தீவிரமான பிரச்னை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மருத்துவக் குழு அமைத்து உடனடியாக இந்த விவகாரம் குறித்து மாநில அரசு விசாரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் இருப்பில் உள்ள பிற மருந்துகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.