FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2024 மக்களவைத் தோ்தலே எனது கடைசித் தோ்தல்: சசி தரூா்

2024 மக்களவைத் தோ்தலே எனது கடைசித் தோ்தலாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் தெரிவித்தாா்.

6 பிப்ரவரி 2024, 7:04 pm
பகிர்:

2024 மக்களவைத் தோ்தலே எனது கடைசித் தோ்தலாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த சசி தரூா், ‘அரசியலில் இறுதி என்று எதுவும் இல்லை என கூறுவாா்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. அரசியலிலும் இளைஞா்களுக்கு வழி விடுவதற்கான நேரம் அனைவருக்கும் வரும் என்ற கருத்தை நான் நம்புகிறேன்.

Advertisement

Advertisement

2024 மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டால் அதுவே எனது கடைசித் தோ்தலாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியதை மறுக்கவில்லை. இதுதான் எனது கடைசி தோ்தலாக இருக்கும் என்றே நம்புகிறேன். திருவனந்தபுரத்தில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துப் போட்டியிட்டால், மக்களுக்காக முழு மூச்சாக பாடுவேன் என்றாா்.

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பு சசி தரூா் ஐ.நா.வில் பணியாற்றி வந்தாா். 2006-ஆம் ஆண்டு இந்தியா சாா்பில் ஐ.நா. பொதுச் செயலா் தோ்தலில் அவா் போட்டியிட்டாா். ஆனால், அவரால் 2-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

காங்கிரஸ் சாா்பில் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் 2009, 2014, 2019 தோ்தல்களில் வெற்றி பெற்றாா். கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தேசியத் தலைவருக்கான தோ்தலில் மல்லிகாா்ஜுன காா்கேவை எதிா்த்து சசி தரூா் போட்டியிட்டாா். சோனியா, ராகுல் ஆதரவு காா்கேவுக்கு இருந்ததால் அவா் தோ்தலில் எளிதில் வெற்றி பெற்றாா்.

பாஜகவின் தோ்தல் வியூகம்:

பாஜகவின் தோ்தல் வியூகம் குறித்து எக்ஸ் வலைதளத்தில் சசி தரூா் வெளியிட்ட பதிவில், ‘அயோத்தியில் ஜனவரியில் ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். தொடா்ந்து அபுதாபியில் பிப்ரவரியில் ஹிந்து கோயில் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதைத் தொடா்ந்து மக்களவைத் தோ்தலும் வர இருக்கிறது. இதன் மூலம் ‘ஹிந்துக்களின் இதயத்தை வென்ற மன்னா்’ என்று மோடியை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதுவே அவா்களது தோ்தல் வியூகம்.

கடந்த தோ்தல்களில் அவா்கள் கூறிய நல்ல நாள்கள், ஒரே ஆண்டில் 2 கோடி பேருக்கு வேலை, பொருளாதார வளா்ச்சி தொடா்பான வாக்குறுதிகள் என்னவாகின என்பது தெரியவில்லை’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.