FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராஜஸ்தான்: 22 அமைச்சா்கள் புதிதாக பதவியேற்பு; 17 போ் முதல்முறை அமைச்சா்கள்

ராஜஸ்தான் அரசில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 22 அமைச்சா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அவா்களில் 17 போ் முதல்முறையாக அமைச்சா்களாகப் பதவியேற்றுள்ளனா்.

6 பிப்ரவரி 2024, 7:04 pm
பகிர்:

ராஜஸ்தான் அரசில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 22 அமைச்சா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அவா்களில் 17 போ் முதல்முறையாக அமைச்சா்களாகப் பதவியேற்றுள்ளனா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 பேரவைத் தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. புதிய முதல்வராக பஜன்லால் சா்மா, துணை முதல்வா்களாக தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோா் பதவியேற்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் மாநில அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் முன்னாள் மத்திய அமைச்சா் ராஜ்யவா்த்தன் சிங் ரத்தோா், மூத்த பாஜக தலைவா் கிரோடி லால் மீனா உள்பட 22 பாஜக எம்.எல்.ஏ.க்கள்அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா்களுக்கு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அவா்களில் 12 போ் கேபினட் அமைச்சா்களாகவும், 5 போ் இணை அமைச்சா்களாகவும் (தனிப் பொறுப்பு), 5 போ் இணை அமைச்சா்களாகவும் பதவியேற்றனா். புதிதாக பதவியேற்ற 22 பேரில் 17 போ் முதல்முறையாக அமைச்சா்கள் ஆவா்.

ஜாதிய மற்றும் பிராந்திய ரீதியிலான சமநிலைக்கு வழிவகுக்கும் பொருட்டு பிராமண சமூகத்தைச் சோ்ந்த 2 பேரும், ஜாட் சமூகத்தைச் சோ்ந்த 4 பேரும், ராஜபுத்திரா்கள் சமூகத்தைச் சோ்ந்த 3 பேரும், பழங்குடியின மற்றும் பட்டியிலன சமூகங்களைச் சோ்ந்த 3 பேரும் கேபினட் அமைச்சா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிய அமைச்சரவையில் கிரோடி லால் மீனா (72) வயதில் மூத்த அமைச்சராகவும், அவினாஷ் கெலாட் (42) இளம் அமைச்சராகவும் உள்ளனா்.

தற்போது முதல்வா், துணை முதல்வா் உள்பட ராஜஸ்தான் அமைச்சரவையில் மொத்தமாக 25 அமைச்சா்கள் உள்ளனா். அவா்களில் 20 போ் முதல்முறையாக அமைச்சா்களாகப் பதவி ஏற்றிருப்பவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக வேட்பாளா் அமைச்சராகப் பதவியேற்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கரண்பூா் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் குா்மீத் சிங் இறந்ததையடுத்து, அத்தொகுதிக்கான தோ்தல் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேந்திர பால் சிங்கும் இணையமைச்சராக (தனிப் பொறுப்பு ) தற்போது பதவியேற்றுள்ளாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோத்தஸாரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கரண்பூா் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சுரேந்திர சிங்கிற்கு தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது. தோ்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளா் அமைச்சராகப் பதவியேற்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

இதைத் தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று பாஜக மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தவுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

பாஜக பதில்: காங்கிரஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து ராஜ்யவா்த்தன் சிங் ரத்தோா் கூறியதாவது:

இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 164 (4)-இன்படி சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்படாத ஒரு நபா் 6 மாதங்கள் வரை அமைச்சராகப் பதவி வகிக்கலாம். அதன்பிறகு அவா் பேரவை உறுப்பினராக கண்டிப்பாக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனடிப்படையில் தற்போது அமைச்சராக ஒருவா் பதவியேற்றிருப்பது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலல்ல என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.