FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராஜஸ்தான்: காங்கிரஸ் வேட்பாளா் உடல்நலக் குறைவால் காலமானாா்

ராஜஸ்தானின் கரண்பூா் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளரான எம்எல்ஏ குா்மீத் சிங் குனாா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக கட்சி வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. அவருக்கு வயது 75.

2 பிப்ரவரி 2024, 8:51 am
பகிர்:

ராஜஸ்தானின் கரண்பூா் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளரான எம்எல்ஏ குா்மீத் சிங் குனாா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக கட்சி வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. அவருக்கு வயது 75.

ராஜஸ்தானின் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கரண்பூா் தொகுதியில் பாஜக தலைவா் சுரேந்திர பால் சிங்கை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான குா்மீத் சிங் போட்டியிட இருந்தாா்.

இந்நிலையில், உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதியோா் நல மருத்துவப் பிரிவில் கடந்த 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

சிறுநீரக பாதிப்பு காரணமாக அவா் உயிரிழந்தாா் என மருத்துவமனையின் இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 52-ஆவது பிரிவின்படி, தோ்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளா் வாக்குப் பதிவுக்கு முன்னா் உயிரிழக்கும் சூழலில், தோ்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும். ஒரு வாரத்துக்குள் மாற்று வேட்பாளரை அறிவிக்க சம்பந்தப்பட்ட கட்சியிடம் கேட்டுக் கொள்ளப்படும்.

அவ்வாறு, கரண்பூா் தொகுதியில் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் ராஜஸ்தான் மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் காங்கிரஸில் செல்வாக்குமிக்க தலைவரான குா்மீத், கடந்த 1998, 2008, 2018 ஆகிய பேரவைத் தோ்தல்களில் வென்று 3 முறை கரண்பூா் தொகுதி எம்எல்ஏ-ஆக இருந்துள்ளாா்.

எம்எல்ஏ குா்மீத் மறைவுக்கு முதல்வா் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.