2 லட்சம் மெ. டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு
வெங்காயத்தின் விலையை சமப்படுத்தவும் பற்றாக்குறையை தடுக்கவும் தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) சாா்பில் 2 லட்சம் மெ.டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி நாடாளுமன்ற சாலையில் படேல் செளக் மெட்ரோ நிலையம் அருகே ‘என்சிசிஎஃப்‘ பின் புதிய அங்காடியை ரோஹித் குமாா் சிங் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
தில்லியில் தற்போது வெங்காயத்தின் விலை ரூ 28 முதல் ரூ.40 வரை யாக உள்ளது. இருப்பினும் வருகின்ற மழைக்காலங்களில் வெங்காயம் நுகா்வோருக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய நுகா்வோா் துறை நிலைமை தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
இது குறித்து இந்த புதிய அங்காடியை திறந்து வைத்து பின்னா் மத்திய நுகா்வோா் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் செய்தியாளா்களிடம் அவா் பேசினாா். அப்போது கூறியது வருமாறு:
விலை நிலைப்படுத்தல் நிதி (பிஎஸ்எப்) திட்டத்தின் கீழ், இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிகழாண்டில் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான வெங்காயத்தை ரபி சந்தை பருவத்தில் கொள்முதல் செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் ரபி பருவத்தில் கொள்முதல் இலக்கு 1.5 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இதில் வெங்காயத்தின் சராசரி கொள்முதல் விலை ஒரு கிலோவுக்கு ரூ.16.93. ஆக இருந்தது. நிகழாண்டு கொள்முதல் இலக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன்னாகும். ஏற்கனவே 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் என்சிசிஎஃப் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் சராசரி கொள்முதல் விகிதம் கிலோ ஒன்றிற்கு ரூ. 29.5 ஆக இருந்தது. இதன் விளைவாக, விவசாயிகளின் வருமானம் 74.24 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.
மேலும் இந்த வெங்காய விவசாயிகளிடம் முதன் முறையாக நேரடி பணப் பரிமாற்றத்தையும் (டிபிடி) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் கொள்முதல் மற்றும் தர மதிப்பீட்டிற்குப் எந்த இடைத்தரகா்களும் இல்லாமல் நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கிற்கு பணப்பரி மாற்றம் செய்யப்பட்டது.
வெங்காயம் விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகள்,என்சிசிஎஃப் யுடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு விவசாயி உற்பத்தியாளா் அமைப்பு(எஃப்.பி.ஓ), அல்லது தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களில்(பிஏசிஎஸ்) மூலம் நேரடியாக இணையதளம் அல்லது தங்கள் கைப்பேசி மூலமாக எங்கும் பதிவு செய்து வெங்காயத்தை விற்க முடிவும். நேரடியாக பதிவு செய்து கொள்ள விவசாயிகளுக்கு முழுசுதந்திரம் வழங்கப்பட்டது.
2023- இல் கொள்முதலில் சுமாா் 250 எஃப்.பி.ஓ க்கள், 25 மேற்பட்ட கூட்டமைப்புகள் மூலமாக விவசாயிகள் பங்கேற்றனா். நிகழாண்டில் ஆண்டு 98 கூட்டமைப்புகள் மற்றும் 410 க்கும் மேற்பட்ட எஃப்.பி.ஓ க்கள், பிஏசிஎஸ் மூலமாக பங்கேற்ற விவசாயிகளிடம் கொள் முதல் செய்யப்பட்டது. இதுவரை இந்த நேரடி கொள்முதலில் 6,100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசிடம் பயனடைந்துள்ளனா்.
கொள்முதல் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. 10,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இரண்டு முதல் மூன்று மடங்கு கொள்முதல் அதிகரிக்கும். என்சிசிஎஃப் நிறுவனம் வெங்காய விவசாயிகளை அணுகி, காரீஃப் பருவ வெங்காய சாகுபடியின் பரப்பை அதிகரிக்க செய்து வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தை சேமித்து வருகின்றோம். சேமிப்பு கிடங்குகளின் திறன் 5 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா் செயலா்.