முகப்பு
இந்தியா

தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது? மேடையில் தமிழிசையிடம் அமித் ஷா கண்டிப்பு??

தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது, மேடையில் தமிழிசையிடம் அமித் ஷா கண்டிப்பாக பேசிய காட்சிகள் வெளியானது.

Updated On : 12 ஜூன், 2024 at 12:30 PM
பகிர்:

தமிழக பாஜகவில் அண்ணாமலை தரப்பு, தமிழிசை தரப்பு என இரு அணிகளுக்குள் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டிருப்பதாகவும் இது குறித்து ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா மேடையிலேயே தமிழிசையை அமித் ஷா கண்டித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் விடியோவில் பதிவாகி, ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் வெங்கைய நாயுடு உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் வந்திருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பினார். அப்போது அவரை கூப்பிட்ட அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கனிவான முறையில் பதிலளிக்கிறார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசுகிறார். தமிழிசைக்கு ஏதோ அறிவுறுத்துகிறார் என்பது போல அமைந்திருந்தது அவரது பேச்சு. இரண்டு பேரும் பேசிக்கொள்வது சாதாரணமானதாக இல்லை என்பது, அவர்கள் அருகில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களிலிருந்தும் நன்றாகவே தெரிகிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகியிருக்கிறருது.

ஏற்கனவே, தமிழக பாஜகவில் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அமித் ஷா - தமிழிசை உடனான இந்த பேச்சுவார்த்தையுடன் இது இணைக்கப்பட்டுவிட்டது. மேலும், தமிழக பாஜக உள்கட்சிப் பூசல் தொடர்பாகவே அமித் ஷா அறிவுறுத்தியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில், இது என்னவிதமான அரசியல்? தமிழகத்தைச் சேர்ந்த மிக முக்கிய பெண் அரசியல் தலைவரிடம் இப்படி அமித் ஷா பேசுவது சரியா? இதனை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அமித் ஷா உணர்ந்திருக்க வேண்டும், இது மிகவும் தவறான உதாரணமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்த நிலையில், கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் கட்சித் தலைவர் அணிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை குறித்து தமிழிசை நேரடியாக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இரு தரப்பு அணியும் சமூக வலைத்தளங்களில் நேரடியாகவே மோதிக்கொண்டுள்ளன. இந்த நிலையில்தான் தமிழக பாஜக உள்கட்சி பூசல் குறித்து கட்சித் தலைமை இரு தரப்பிலிருந்தும் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படி என்னதான் சொல்லியிருந்தார் தமிழிசை?

தமிழகத்தில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறாத நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை - முன்னாள் தலைவர் தமிழிசை இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது போல முன்னதாக தமிழிசை சூசகமாகப் பேசி வந்தார்.

இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தமிழிசை இவ்வாறு கூறியிருந்தார். அதாவது, எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் கட்சியின் தலைவர் பதவியில் இருந்த போது கட்டுப்பாடு இருந்தது. நான் சிலரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன். கட்சியில் இருக்க சிலருக்கு அனுமதி இல்லை. அதாவது சமூக விரோத ரௌடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன்.

ஆனால் இப்போது அப்படியல்ல. கட்சியில் இப்போது ரௌடிகள் சேர்ந்து உள்ளனர். கட்சியில் கடுமையாக உழைக்கும் தலைவர்களுக்கு பதவி தர வேண்டும். மாநில தலைவர் சரியாக தான் இருக்கிறார். அவரின் நடவடிக்கை வேறு. ஆனால் நான் சொல்வது என்னவென்றால் இதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று நேரடியாக அல்லாமல், மறைமுகமாக அண்ணாமலை குறித்து கூறியிருந்தார்.

இதுதான் தற்போது கட்சிக்குள் உள்கட்சி பூசலாக வளர்ந்து, விளக்கம் கேட்கும் அளவுக்கு மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மேடையில் என்னதான் நடந்தது என்பது குறித்து இதுவரை தமிழிசை விளக்கம் கொடுக்கவில்லை. அவர் சொன்னால்தான் உண்மை என்னவென்று தெரியவரலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →