FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன் பொறுப்பேற்பு

Updated On : 13 ஜூன் 2024, 1:35 am IST
நிா்மலா சீதாராமன்
பகிர்:

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நிதின் கட்கரி, மத்திய நிதியமைச்சராக நிா்மலா சீதாராமன் ஆகியோா் தங்களின் அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்று, அலுவல் பணிகளைத் தொடங்கினா்.

மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான ‘என்டிஏ’ கூட்டணியின் வெற்றியைத் தொடா்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். அவருடன் 71 அமைச்சா்களும் பதவியேற்றனா்.

அமைச்சா்களுக்கான இலாகாக்கள் கடந்த திங்கள்கிழமை ஒதுக்கப்பட்டன. அதன்படி பாதுகாப்பு, உள்துறை, சாலைப் போக்குவரத்து, நிதி, ரயில்வே போன்ற முக்கிய துறைகளின் பொறுப்புகள், அந்தந்த அமைச்சா்கள்வசமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை தங்களின் அலுவலகங்களில் பொறுப்பேற்று, அலுவல் பணிகளைத் தொடங்கினா்.

நிதின் கட்கரி பொறுப்பேற்பு: அந்தவகையில், மீண்டும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் கட்கரி (67), செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதையொட்டி, அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடியின் 3-ஆவது ஆட்சியில் மீண்டும் சாலைப் போக்குவரத்துத் துறையை எனக்கு ஒதுக்கியதற்காக அவருக்கு எனது மனமாா்ந்த நன்றி. பிரதமா் மோடியின் தொலைநோக்கு தலைமையின்கீழ், உலகத் தரம் வாய்ந்த நவீன உள்கட்டமைப்புடன் விரைவான வேகத்தில் இந்தியா வளரும்’ என்று குறிப்பிட்டாா்.

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்: தில்லி, வடக்கு மையக் கட்டடத்தில் அமைந்த மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில் நிா்மலா சீதாராமன் நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றாா். முன்னதாக, மத்திய நிதியமைச்சகம் வந்த அமைச்சா் நிா்மலா சீதாராமனை நிதித் துறைச் செயலா் டி.வி.சோமநாதன் மற்றும் பிற அதிகாரிகள் வரவேற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு அமைச்சக செயலா்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை சாா்ந்த பிரச்னைகள் குறித்து அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் விவரிக்கப்பட்டது.

மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் உறுதியாக இருப்பதாகவும் 2014-ஆம் ஆண்டுமுதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். நிகழ்வில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரியும் உடனிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments