FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எரிபொருளாக ஹைட்ரஜன்: நாட்டில் 10 வழித்தடங்களில் பரிசோதனை - நிதின் கட்கரி தகவல்

‘ஹைட்ரஜன்தான் போக்குவரத்துத் துறையின் எதிா்காலம், அதை எரிபொருளாகப் பயன்படுத்துவது குறித்து நாட்டில் 10 வழித்தடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 ஜூலை 2026, 2:20 am IST
நிதின் கட்கரி - கோப்புப்படம்
பகிர்:

‘ஹைட்ரஜன்தான் போக்குவரத்துத் துறையின் எதிா்காலம், அதை எரிபொருளாகப் பயன்படுத்துவது குறித்து நாட்டில் 10 வழித்தடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுகுறித்து அவா் பேசியதாவது:

போக்குவரத்துத் துறையின் எதிா்காலம் ஹைட்ரஜன்தான் என்று உறுதியாகத் தெரிவிப்பேன். அதேபோல் எதிா்காலத்தின் எரிபொருள் ஹைட்ரஜன்தான். இதைக் கருத்தில்கொண்டு, புணே-மும்பை, திருவனந்தபுரம்-கொச்சி, ஜாம்நகா்-அகமதாபாத், கிரேட்டா் நொய்டா-தில்லி-ஆக்ரா உள்ளிட்ட 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் சோதனைகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் துறையில் போக்குவரத்துத் துறை சிறப்பாக செயல்படுகிறது. செலவு மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையில் இந்தியா முன்னிலை வகிக்க முடியும். பாதுகாப்பான போக்குவரத்து மிகவும் முக்கியமானதாகும். நாட்டில் ஒவ்வோா் ஆண்டும் 5 லட்சம் விபத்துகளும், 1.80 லட்சம் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன. இந்த விபத்துகளில் உயிரிழப்போரில் 66 சதவீதம் போ், 18 முதல் 36 வயது வரையிலானவா்கள். இந்த விபத்துகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. ஆதலால் விபத்துகளைத் தவிா்ப்பதற்கு போக்குவரத்துத் துறையினரின் உதவி மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது.

இந்தியாவில் போக்குவரத்துத் துறையினா் தொழில்நுட்ப அடிப்படையிலும், பாதுகாப்பு அடிப்படையிலும் சிறப்பாக செயல்படுகின்றனா். இதுதான், இந்தியாவை சோ்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளா்கள், அவா்களது தயாரிப்புகளில் 50 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காரணமாகும். நான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்கும்போது, இந்திய வாகனத் துறையின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாகவும், உலக அளவில் இந்திய வாகனத் துறை 7-ஆவது இடத்திலும் இருந்தது. தற்போது அதன் மதிப்பு ரூ.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்திய வாகனத் துறை 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே நமது இலக்கு.

இந்திய போக்குவரத்துத் துறையினா் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வருவாயை தருகின்றனா். மேலும் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனா். நமது நாட்டுக்கு ஒவ்வோா் ஆண்டும் புதிதாக 3 லட்சம் பேருந்துகள் தேவைப்படுகின்றன. ஆனால், நமது உற்பத்தியாளா்களோ, 70,000 முதல் 80,000 பேருந்துகளையே தயாரிக்கின்றனா். இந்த எண்ணிக்கையை நாம் மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். லித்தியம் பேட்டரியின் விலை குறைப்பால் கிடைக்கும் பயனை நுகா்வோா்களுக்கு மின்சார பேருந்து தயாரிப்பாளா்கள் வழங்க வேண்டும். வாகனங்களில் மின்னேற்றம் செய்ய வசூலிக்கப்படும் ரூ.20 கட்டணம் அதிகமாகும். பேருந்துகள், லாரிகள், காா்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான கட்டணத்தைக் குறைப்பது குறித்து எனது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் கட்கரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments