வட இந்தியாவில் வெப்பத் தாக்குதலுக்கு 110 பேர் பலி, 40 ஆயிரம் பேர் பாதிப்பு!
வட மாநிலங்களில் வாட்டி எடுக்கும் வெயிலுக்கு நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..
வட இந்தியாவில் வாட்டி வதைக்கும் கடுமையான வெப்பத் தாக்குதலுக்கு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு நாட்டின் பெரும்பாலான பகுதியில் வெப்ப அலை வீசி வருகின்றது. வெப்ப தாக்குதலைத் தாங்க முடியாமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல், உத்தரகண்ட், பிகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், வடகிழக்கு மத்திய பிரதேசம், வடமேற்கு ராஜஸ்தான், ஜம்மு உள்ளிட்ட இடங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 18 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்துக்கு 110 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 18ல் மட்டும் வெப்பத் தாக்குதலுக்கு 6 பேர் இறந்துள்ளனர்.
மேலும், வெப்ப தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.