முகப்பு
இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்!

அரவிந்த் கேஜரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 26 ஜூன் 2024, 7:39 pm IST
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) புதன்கிழமை கைது செய்தது. அவரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஏற்கெனவே, இதே வழக்கில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை முறைகேட்டில் அமலாக்கத் துறையினரால் கேஜரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சிறையில் செவ்வாய்க்கிழமை இரவு விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து புதன்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிபிஐ மீது குற்றச்சாட்டு: அப்போது நீதிமன்றத்தில் கேஜரிவால் கூறுகையில், "சிபிஐ வட்டாரங்களை மேற்கோள்காட்டி, நான் ஒரு அறிக்கையில் முழுப் பழியையும் மனீஷ் சிசோடியா மீது சுமத்தியுள்ளேன் என்று ஊடகங்களில் காட்டப்படுகிறது. சிசோடியா குற்றவாளி என்றோ அல்லது வேறு யாரும் குற்றவாளி என்றோ நான் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை.

சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சியும், நானும் நிரபராதிகள். ஊடகங்கள் முன் எங்களை அவதூறாகப் பேசுவதே அவர்களின் திட்டமாகும்' என்றார்.

ஆனால், சிபிஐ உண்மையின் அடிப்படையில் வாதிட்டதாகவும், இந்த வழக்கில் பெரும் சதியை வெளிக்கொணர கேஜரிவாலை விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர், "இது அதிகார துஷ்பிரயோகத்தின் வழக்காகும்' என்றார்.

ஜாமீன் மறுப்புக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றார்: அமலாக்கத் துறை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்த தில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை திரும்பப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.