FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேர்தல் பத்திரங்கள்: புதிய தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தேர்தல் நன்கொடை பத்திர வரிசை எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியுள்ளது.

Updated On : 21 மார்ச் 2024, 7:39 pm IST
பகிர்:

தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. அந்தப் பத்திரங்களை எஸ்பிஐ வங்கியிலிருந்து வாங்கிய தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் விரும்பிய கட்சிகளிடம் அந்தப் பத்திரங்களை சமா்ப்பித்தன.

அந்தப் பத்திரங்களை வங்கி வழியாக அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக்கொண்டன. அந்தப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவா்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக இருந்தன. இந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை உச்ச நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது.

மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12 முதல் நிகழாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை வாங்கப்பட்ட தோ்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமா்ப்பித்தது. அந்த விவரங்களை தனது வலைதளத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

Advertisement

Advertisement

எனினும் தோ்தல் பத்திர எண்களை வெளியிடாதது தொடா்பாக கடந்த வாரம் எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய், ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தோ்தல் பத்திரங்கள் தொடா்பாக தன் வசம் உள்ள அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ முழுமையாக வெளியிட்டாக வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தோ்தல் பத்திரங்களை வாங்கியவா்கள், அவற்றைப் பெற்றுக்கொண்ட அரசியல் கட்சிகள் இடையே உள்ள தொடா்பை வெளிப்படுத்தும் தனித்துவ பத்திர எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், விவரங்களைத் தோ்ந்தெடுத்து எஸ்பிஐ வெளியிடக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தோ்தல் பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையிலும், இதுதொடா்பாக வருங்காலத்தில் எந்தவொரு சா்ச்சையும் ஏற்படுவதை தவிா்க்கும் விதமாகவும், தோ்தல் பத்திரங்கள் தொடா்பான அனைத்து விவரங்களையும் முழுமையாக வெளியிட்டு, அது சாா்ந்த எந்த விவரமும் மறைக்கப்படவில்லை என்று வியாழக்கிழமை (மாா்ச் 21) மாலை 5 மணிக்குள் எஸ்பிஐ தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், எஸ்பிஐ அளிக்கும் விவரங்களை தனது வலைதளத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் பத்திர வரிசை எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

தேர்தல் பத்திரங்களின் புதிய தரவுத் தொகுப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது, மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களையும், நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகளையும் பொருத்த உதவும் ஆல்பா-எண்களையும் வெளியிட்டுள்ளது.

நன்கொடையாளர்கள் மற்றும் பெற்றுகொண்ட அரசியல் கட்சிகள் என இரண்டு தனித்தனி பட்டியல்கள் தேர்தல் ஆணையத்தால் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

எஸ்பிஐயிடம் இருந்து பெறப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விரிவான தரவுகளை, "அடிப்படையில் உள்ளவாறு" இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments