முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

Updated On : 25 ஏப்ரல், 2025 at 9:58 AM
பகிர்:
Updated On : 25 ஏப்ரல், 2025 at 9:52 AM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினா் சோதனையை பலப்படுத்தியுள்ளனா்.

கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தங்மாா்க் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது பாதுகாப்பு படை வீரா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

Advertisement

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி நாலா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து அங்கு காஷ்மீா் காவல் துறையுடன் இணைந்து ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படை பிரிவும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணமடைந்ததாக ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது.

Updated On : 25 ஏப்ரல், 2025 at 9:54 AM

வீரமரணமடைந்த ஹவில்தாா் ஜன்து அலி ஷேக்கின் துணிவும் அவரது தியாகமும் எப்போதும் நினைவுகூரப்படும் எனவும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது.

இந்த நிலையில், பந்திபோரா மாவட்டத்தின் குல்னார் பாசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை பந்திபோராவின் கோல்னார் அஜாஸ் பகுதியில் இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். தேடுதல் நடவடிக்கை மோதலாக மாறியது.

இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத் தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மூத்த ராணுவத் தளபதிகள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை ராணுவத் தளபதி சந்திக்க உள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.