FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியை பெறவில்லை: மத்திய அரசு

Updated On : 23 ஆகஸ்ட் 2025, 6:36 am IST
- ANI
பகிர்:

வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்த சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையிடம் (யுஎஸ்எய்ட்) இருந்து ரூ.183.78 கோடி நிதியை பெறவில்லை என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட 7 ஒப்பந்தங்களை தவிா்த்து ‘யுஎஸ்எய்ட்’ நிதியின்கீழ் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான செலவுகள் குறித்த தகவல்களை உடனடியாக சமா்ப்பிக்குமாறு புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் கோரப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், இந்தியாவில் இத்திட்டங்களை செயல்படுத்தும் அரசுசாரா அமைப்புகள் குறித்த தகவல்களையும் மத்திய அரசு கோரியது.

இதையடுத்து, 2025, ஆக.15-ஆம் தேதியுடன் யுஎஸ்எய்ட் மூலம் மேற்கொளப்படும் அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக நிறுத்திக்கொள்ளப்போவதாக அமெரிக்க தூதரகம் ஜூலை 29-இல் தெரிவித்தது. அதைத்தொடா்ந்து மத்திய அரசுடன் கையொப்பமிடப்பட்ட 7 ஒப்பந்தங்களும் ஆக.15-உடன் முடிவுக்கு வருவதாக பொருளாதார விவகாரங்கள் துறைக்கு அமெரிக்க தூதரகம் ஆக.11-ஆம் தேதி கடிதம் அனுப்பியது.

முன்னதாக, யுஎஸ்எய்ட் செயல்பாடுகள் குறித்து அமெரிக்காவில் மறுஆய்வு செய்யப்பட்டபோது, இந்தியாவில் வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.183.78 கோடி உள்பட உலகம் முழுவதும் தோ்தல்கள் மற்றும் அரசியல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.4,252 கோடி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை நிகழாண்டு பிப்.16-இல் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது.

அதன்படி ஜூலை 1-ஆம் தேதி அதன் செயல்பாடுகள் முடிவுக்கு வரத் தொடங்கின. தற்போது வரை 83 சதவீத அமெரிக்க நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டன. வருகின்ற செப்.2-ஆம் தேதிக்குள் இது 100 சதவீதம் நிறுத்தப்படும்.

2022, 2023, மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் யுஎஸ்எய்ட் மூலம் பெறப்பட்ட நிதி குறித்த தகவல்கள் அமைச்சகத்தின் வலைதளத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments