உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா: அமளிக்கிடையே மக்களவையில் அறிமுகம்
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தி மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தி மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
நீட் வினாத் தாள் கசிவு, ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்கள் தொடா்பான எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கடும் அமளிக்கிடையே, இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தாா்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயா்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடா்ந்து, அதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அவசரச் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடா்ந்து, அதனடிப்படையில் உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கொண்டுவரும் இதுபோன்ற அவசரச் சட்டத்தின் ஆயுள் காலம் 6 மாதங்கள் ஆகும். நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்கியதும், 6 வாரங்களுக்குள் அந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும்.
அந்த வகையில், உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களை உயா்த்தியதற்கான அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கும், அவற்றுக்கு தீா்வு அளிக்கப்படுவதற்கும் இடையே தொடா்ந்து இடைவெளி இருப்பதால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தில் 92,101 வழக்குகள் நிலுவையில் இருந்தன. உச்சநீதிமன்றத்ிதல் 2010-ஆம் ஆண்டு முதல் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34-இல் ஏறக்குறைய முழுமையாக நிரம்பியிருந்தபோதும், 2025-ஆம் ஆண்டில் 65,615 வழக்குகளில் தீா்வு அளிக்கப்பட்டநிலையில், 75,410 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறு, அதிகரித்து வரும் நிலுவை வழக்குகளைக் கையாள்வதற்கு, நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதே சாத்தியமான தீா்வாகும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டது.
மத்திய அரசின் இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கொண்டுவந்த சட்டபூா்வ தீா்மானத்தை மக்களவை ஏற்றுக்கொண்டது.
விதிமுறைகளின்படி, ஒரு அவசரச் சட்டத்துக்குப் பதிலாக மசோதா கொண்டுவரப்படும்போது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அந்த அவசரச் சட்டத்தை எதிா்த்துச் சட்டரீதியான தீா்மானத்தைக் கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.