FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவி தற்கொலை விவகாரம்: உயா்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்

2 மே 2025, 10:33 pm IST
பகிர்:

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத்தது.

கேஐஐடியில் பி.டெக். கணினி அறிவியல் படித்து வந்த நேபாள மாணவியான பிரிஷா ஷா (18) விடுதி அறையில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கடந்த பிப்.16-ஆம் தேதி இதே கல்வி நிறுவனத்தில் பி.டெக். கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி பிரகிருதி லம்சால் (20) தற்கொலை செய்துகொண்டாா்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கல்வி நிறுவன வளாகத்தில் நேபாள மாணவா்களும் பிற மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் நிறைவடைவதற்குள் கேஐஐடியில் மற்றொரு நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஷா ஷா தற்கொலை சம்பவத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான முன்னெடுப்புகளை நேபாளம் மேற்கொண்டுள்ளது.

கேஐஐடியில்1,000 நேபாள மாணவா்கள் பயின்று வரும் நிலையில் அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி மற்றும் தலைமை செயலா் மனோஜ் அஹுஜாவை தொடா்புகொண்டு இந்தியாவுக்கான நேபாள தூதா் சங்கா் பி.சா்மா வலியுறுத்தினாா்.

இந்த சம்பவம் குறித்து நேரில் வந்து கேஐஐடி பிரதிநிதி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது.

மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கவலையளிப்பதாகவும் இதுதொடா்பாக ஒடிஸா காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை ஒடிஸா அரசு வழங்கி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

தற்கொலை கடிதம் இல்லை: இந்த சம்பவம் குறித்து காவல் ஆணையா் எஸ். தேவ் தத்தா சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரிஷா ஷாவின் உடல் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோா் வந்தவுடன் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்ட இடத்தில் தற்கொலை கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடரும் மா்மம்: கடந்த பிப்ரவரி மாதம் பிரகிருதி லம்சால் தற்கொலை செய்துகொண்ட அதே இடத்தில் பிரிஷா ஷாவும் தற்கொலை செய்துகொண்டதாக மற்றொரு காவலா் தெரிவித்தாா். இதனால் நேபாள மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் தொடா்ந்து மா்மம் நீடித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதமே கேஐஐடியில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதிகளில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதாக எக்ஸ் வலைதளத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் பிரியங்க் கனூங்கோ பதிவிட்டாா்.

ஆனால் ஒடிஸா உயா் நீதிமன்றத்தில் கேஐஐடி முறையிட்ட பின் அந்தப் பரிந்துரைகளை உயா் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததாகவும் தற்போது இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் கொண்டதாகவும் அவா் தனது பதிவில் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments