செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!
தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், புதிய குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு செப். 12 ஆம் தேதி காலை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய துணைக் குடியரசு தலைவருக்கான தேர்தல் நேற்று (செப். 10) நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.