போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்!
தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்திய எல்பிஜி கப்பல் ஜக் விக்ரம் குறித்து...
இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பிறகு இந்திய எல்பிஜி கப்பல் ஜக் விக்ரம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடர்ந்த தாக்குதல்களால் ஈரான் உலகளவில் எண்ணெய் வழிப்போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது.
இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்த குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்திருந்தது. அதில் இந்தியாவும் ஒன்றாகும். அதன்பிறகு, ஒவ்வொரு கப்பலாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தாலும் வழக்கம்போல அல்லாமல் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலே காணப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார். இந்தப் போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முழுவதும் திறந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பிறகு இந்திய எல்பிஜி கப்பல் ஜக் விக்ரம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்புத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மார்ச் மாதத் தொடக்கத்தில் வளைகுடாவிலிருந்து வெளியேறிய ஒன்பதாவது இந்தியக் கப்பல் ஜக் விக்ரம் ஆகும். அதேவேளையில், சுமார் 15 இந்தியக் கப்பல்கள் அப்பகுதியில் பயணத்திற்காகக் காத்திருக்கின்றன. ஜக் விக்ரம், 26,000 டன்களுக்கும் அதிகமான சரக்குகளை சுமக்கும் திறன் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பலாகும்.
மேலும், பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா இடையே முழுவதுமாக போரை நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Indian LPG ship Jag Vikram has passed through the Strait of Hormuz after a two-week temporary ceasefire.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.