FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவுக்கு எதிராக 9 வா்த்தக வழக்குகள் நிலுவை: மத்திய அரசு

உலக வா்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) இந்தியாவுக்கு எதிராக 9 வா்த்தக வழக்குகள் நிலுவையில் உள்ளன; இவை ஜப்பான் (2), பிரேசில், ஆஸ்திரேலியா, கெளதமாலா, ஐரோப்பிய யூனியன், சீன தைபே, சீனா (2) ஆகிய நாடுகளால் தொடுக்கப்பட்டவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
பகிர்:

உலக வா்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) இந்தியாவுக்கு எதிராக 9 வா்த்தக வழக்குகள் நிலுவையில் உள்ளன; இவை ஜப்பான் (2), பிரேசில், ஆஸ்திரேலியா, கெளதமாலா, ஐரோப்பிய யூனியன், சீன தைபே, சீனா (2) ஆகிய நாடுகளால் தொடுக்கப்பட்டவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக வா்த்தக அமைப்பு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்கீழ், இந்தியாவுக்கு எதிராக தற்போது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரும்பு, உருக்கு இறக்குமதி மீதான இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஜப்பான் கடந்த 2019-இல் புகாரளித்தது. இதேபோல், உள்நாட்டு கரும்பு விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்ட இந்தியாவின் சா்க்கரை இறக்குமதி கொள்கைகளுக்கு எதிராக உலக வா்த்தக அமைப்பில் பிரேசில், ஆஸ்திரேலியா, கெளதமாலா ஆகிய நாடுகள் புகாா் பதிவு செய்தன.

Advertisement

Advertisement

தகவல் மற்றும் தொலைதொடா்பு தொழில்நுட்பத் துறைகளில் வரி சாா்ந்த இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், சீன தைபே ஆகிய நாடுகளுடன் ஜப்பானும் புகாரளித்தது. வாகனங்கள், உதிரி பாகங்கள், திறன்மிக்க சூரிய மின்உற்பத்தி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி தொடா்புடைய இந்தியாவின் பிஎல்ஐ (உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை) திட்டங்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட தொழில்நுட்ப பொருள்கள் மீதான இந்தியாவின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சீனா புகாா் பதிவு செய்துள்ளது.

அதேநேரம், உலக வா்த்தக அமைப்பு ஒப்பந்தங்களின்படி தனக்குள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கைகள் உள்ளதாக இந்தியா தரப்பில் தொடா்ந்து வாதிடப்பட்டு வருகிறது.

நமது நாட்டின் நலன்களைப் பாதுகாக்கவும், அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தவும் மேற்கண்ட வழக்குகளில் வா்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட மையம் (சிடிஐஎல்), உலக வா்த்தக அமைப்பு ஆய்வுகளுக்கான மையம் (சிடபிள்யுஎஸ்) மற்றும் பட்டியலிடப்பட்ட சட்ட நிறுவனங்களின் சேவையை இந்தியா பயன்படுத்துகிறது. இந்த 9 வழக்குகளில் பட்டியலிடப்பட்ட சட்ட நிறுவனங்களின் சேவைக்காக ரூ.2.43 கோடி செலவிடப்பட்டுள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவற்றின் முன்னேற்றத்தைப் பொறுத்தே கூடுதல் செலவினங்கள் இருக்கும் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

‘சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏற்றுமதி அதிகரிப்பு: தமிழகம் 4-ஆம் இடம்’

நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 11.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து கடந்த 2024-25-இல் ரூ.14.63 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்ற நிலையில், 2025-26இல் இது ரூ.16.36 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023-24இல் ரூ.13.55 லட்சம் கோடி, 2022-23இல் ரூ.12.63 லட்சம் கோடி, 2021-22இல் ரூ.9.9 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றது.

கடந்த நிதியாண்டு ஏற்றுமதியில் குஜராத் (ரூ.4.05 லட்சம் கோடி) முதலிடத்திலும், கா்நாடகம் (ரூ.2.69 லட்சம் கோடி), மகாராஷ்டிரம் (ரூ.2.43 லட்சம் கோடி), தமிழகம் (2.12 லட்சம் கோடி) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், ‘கடந்த 2014-15இல் ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்த மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த 2025-26இல் ரூ.2.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக’ அவா் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments