யூரியா 83%, டிஏபி 36% இறக்குமதி அதிகரிப்பு: மத்திய அரசு
உள்நாட்டு தேவை அதிகரிப்பால், யூரியா இறக்குமதி 83 சதவீதமும், டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) இறக்குமதி 36 சதவீதமும் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.
உள்நாட்டு தேவை அதிகரிப்பால், யூரியா இறக்குமதி 83 சதவீதமும், டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) இறக்குமதி 36 சதவீதமும் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.
நாட்டில் கடந்த 5 நிதியாண்டுகளில் முக்கிய உரங்களின் உற்பத்தி மற்றும் இறக்குமதி தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரசாயனங்கள், உரங்கள் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுத் தரவுகளின்படி, கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் யூரியா இறக்குமதி 103.50 லட்சம் டன்களாக அதிகரித்தது. 2024-25ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் (56.47 லட்சம் டன்கள்) இது 83 சதவீத அதிகரிப்பாகும்.
கடந்த 2023-24இல் 70.42 லட்சம் டன்கள், 2022-23இல் 75.83 லட்சம் டன்கள், 2021-22இல் 91.36 லட்சம் டன்கள், 2020-21இல் 98.28 லட்சம் டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 2025-26இல் 61.94 லட்சம் டன்கள் டிஏபி உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 2024-25ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (45.69 லட்சம் டன்கள்) 34 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2023-24இல் 55.67 லட்சம் டன்கள், 2022-23இல் 65.83 லட்சம் டன்கள், 2021-22இல் 54.62 லட்சம் டன்கள், 2020-21இல் 48.82 லட்சம் டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
2025-26இல் யூரியா உற்பத்தி 293.26 லட்சம் டன்களாக குறைந்தது. முந்தைய நிதியாண்டில் இது 306.67 லட்சம் டன்களாக இருந்தது. அதேநேரம், டிஏபி உற்பத்தி 37.72 லட்சம் டன்களில் இருந்து 39.14 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது. 2025-26இல் நாட்டில் மொத்த உர உற்பத்தி 517 லட்சம் டன்கள் என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 44.73 கோடி அட்டைகள்: மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் இதுவரை 44.73 கோடிக்கும் மேற்பட்ட காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; ரூ.1.92 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பில் கட்டணமில்லா சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ், ஜூலை 22-ஆம் தேதி வரை 44.73 கோடிக்கும் மேற்பட்ட காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.1.92 லட்சம் கோடி மதிப்பில் 12.69 கோடி மருத்துவ சிகிச்சை சோ்க்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தில் 27 மருத்துவ சிறப்புப் பிரிவுகளின்கீழ் 1,961 சிகிச்சை தொகுப்புகள் அனுமதிக்கப்படுகின்றன.
புற்றுநோய், இதயநோய்கள், நாள்பட்ட சிறுநீரக நோய், சா்க்கரை நோய் தொடா்பான பாதிப்புகள், வாதம், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், கல்லீரல் நோய்கள் போன்ற தொற்றா நோய்களுக்கான இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட மருத்துவ சிகிச்சைகளும் உள்ளடங்கும். இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 1.86 லட்சம் ஆயுஷ்மான் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் திட்டம், கடந்த 2018-இல் பிரதமா் மோடியால் தொடங்கப்பட்டது. சுமாா் 12 கோடி குடும்பங்கள் மற்றும் 70 வயதைக் கடந்த 6 கோடி மூத்த குடிமக்களுக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வழங்கிவரும் இத்திட்டம், அரசு நிதியில் செயல்படுத்தப்படும் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற சிறப்புக்குரியதாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.