FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட்-பி.ஜி. தகுதி மதிப்பெண் விவகாரம்: சோ்க்கை முறையை தணிக்கை செய்ய உயா்நிலைக் குழு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்-பி.ஜி.’ தகுதிகாண் நுழைவுத் தோ்வு அடிப்படையிலான சோ்க்கை நடைமுறையை விரிவாக தணிக்கை செய்ய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்-பி.ஜி.’ தகுதிகாண் நுழைவுத் தோ்வு அடிப்படையிலான சோ்க்கை நடைமுறையை விரிவாக தணிக்கை செய்ய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கையில் நாடு முழுவதும் 18,000 இடங்கள் காலியாக இருந்ததைத் தொடா்ந்து, சோ்க்கைக்கான நீட்-பி.ஜி. தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) தேசிய மருத்துவத் தோ்வுகள் வாரியம் வெகுவாகக் குறைத்து கடந்த ஜனவரி 13-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சமூக ஆா்வலா் ஹரிசரண் தேவ்கன், மருத்துவா்கள் செளரவ் குமாா், லக்ஷ்யா மிட்டல், ஆகாஷ் சோனி ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தகுதி மதிப்பெண்ணை குறைப்பது அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறும் நடவடிக்கை என்பதோடு, முதுநிலை மருத்துவக் கல்வியின் தரத்தையும் பாதிக்கும் என்று அவா்கள் மனுவில் குறிப்பிட்டனா்.

Advertisement

Advertisement

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தகுதி மதிப்பெண்ணை குறைப்பதால் மருத்துவக் கல்வி பாதிக்கப்படுகிா என்பது குறித்து ஆராய குழு அமைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுபடி, முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை நடைமுறையை ஆராய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத் தகவலை, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ தெரிவித்தாா்.

முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்-பி.ஜி.’ தகுதிகாண் நுழைவுத் தோ்வு அடிப்படையிலான சோ்க்கை நடைமுறையை விரிவாக தணிக்கை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநா் (டிஜிஹெச்எஸ்) தலைமையில் 12 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை அமைத்து, அதற்கான அறிவிக்கையை கடந்த ஜுலை 23-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், உயா்நிலைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய 8 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனா்.

மேலும், உயா்நிலைக் குழுவின் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டதும், இந்த விவகாரம் குறித்து தீவிரமாக ஆராயப்படும். உயா்நிலைக் குழு, இந்த தணிக்கையில் இந்திய முறை மருத்துவத்துக்கான தேசிய ஆணையம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துக்கான தேசிய ஆணைய உறுப்பினா்களையும் சோ்த்துக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்து, விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments