FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சுருக்குமடி வலை மீன்பிடி விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

"தமிழகத்தில் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு 12 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதிக்கலாம்' என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:46 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

"தமிழகத்தில் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு 12 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதிக்கலாம்' என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை நிறைவு செய்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சுருக்குமடி வலையைப் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு 2020, பிப்ரவரி 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக மீனவ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி. எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அடங்கிய அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.எம். நடராஜ் ஆஜராகி முன்வைத்த வாதம்: "சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை 2024, மே 2ஆம் தேதி தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து, 2025, நவம்பர் 4ஆம் தேதி சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

அதன்படி, சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடையில்லை. கடலில் பன்னிரண்டு கடல் மைல் தொலைவுவரையில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பான வழிமுறைகளை மாநில அரசு ஒழுங்குபடுத்தலாம். ஆனால், 12 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதி மத்திய அரசு கட்டுப்பாட்டுப் பகுதியாகும். அங்கு சுருக்குமடி பயன்படுத்தி மீன் பிடிக்க எந்த தடையும் இல்லை' என்று கே.எம்.நடராஜ் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் தமிழக அரசு வழக்குரைஞர் சஞ்சய் ஹெக்டேவிடம், "சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வகுத்துள்ளது. அதன் பின்னரும் சுருக்குமடி வலையை அனுமதிக்க முடியாது என்று நீங்கள் (தமிழக அரசு) எப்படி கூற முடியும்? 12 கடல்மைலுக்கு அப்பால் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க சட்ட விதிமுறைகள் அனுமதிக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழக அரசும் அனுமதிக்க வேண்டியதுதானே? என கேள்வி எழுப்பினர். மேலும், 12 கடல் மைலுக்கு உள்பட்ட தமிழக அரசு வரம்புக்கு உள்பட்ட கடல் எல்லை பகுதிகளில் விதிமுறைகளை மீறி சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களை நீங்கள் கைது செய்து கொள்ளலாம். ஆனால், 12 கடல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அனுமதி மறுப்பது சந்தேகத்தை எழுப்புகிறது' என்றனர்.

இதையடுத்து சுருக்குமடி வலை தொடர்பான சட்ட விதிமுறைகள் மற்ற மாநிலங்களில் எப்படி பின்பற்றப்படுகின்றன? என்பது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விசாரணையை நிறைவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments