FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சுருக்குமடி வலை வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை அனுமதிப்பது தொடா்பான விவகாரத்தில் நிபுணா் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 1:07 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை அனுமதிப்பது தொடா்பான விவகாரத்தில் நிபுணா் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டது.

தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிப்பது தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி. எஸ்.நரசிம்ஹா மற்றும் ஆலோக் ஆராதே அமா்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது மனுதாரா்களான 15க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்களின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கிரிஷ் சந்திர குப்தா,’இந்த விவகாரம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றது, சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை தாக்கல் செய்து விட்டது.

Advertisement

Advertisement

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என குழு அறிக்கையில் கூறி உள்ளது. அந்த அறிக்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் .எந்த மாநிலமும் அந்த அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு மட்டும்தான் அதனை அமல்படுத்தாமல் இருக்கின்றது’ என நீதிபதிகளிடம் வாதங்களை முன்வைத்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ’அந்த அறிக்கை தொடா்பாக விசாரணை மேற்கொண்டு முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றத்திற்கு நாம் இதனை அனுப்பலாமா?’ என வினவினா்.

பின்னா் நீதிபதிகள் தமிழக அரசு வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டேவிடம், ’சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிப்பது தொடா்பாக மத்திய அரசு விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொடுத்திருந்தால் அதன் பின்னரும் சுருக்குமடி வலையை அனுமதிக்க முடியாது என்று நீங்கள் எப்படி கூற முடியும்?’ என கேள்வி எழுப்பினா்.

இதனைத் தொடா்ந்து மத்திய அரசின் வழக்குரைஞா் கே.எம். நடராஜிடம், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்த கே எம் நடராஜ் ’சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடா்பான விவகாரத்தில் ஆய்வு மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்து, அந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடையில்லை.கடலில் பன்னிரண்டு நாட்டிக்கல் மைல் வரையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிப்பது தொடா்பாக மாநிலம் ஒழுங்குபடுத்தலாம், ஆனால் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மத்திய அரசு கட்டுப்பாட்டு பகுதியாகும்’ என கே எம் நடராஜ் தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து நீதிபதிகள், ’குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா?அவ்வாறு வகுக்கப்பட்டிருந்தால்அவற்றை தாக்கல் செய்யுங்கள்’ என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

பின்னணி

சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு 17/02/2020 இல் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிராக மீனவ அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை கடந்த 2022 ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் , மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இந்திய அரசின் மீன்வளத் துறை, 02.08.2022 அன்று சுருக்குமடி வலையை பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நிபுணா் குழுவை அமைத்தது.

இறுதியாக வேறு மீன்பிடி முறையை போல சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறையையும் தொடரலாம் என்று நிபுணா் குழு தனது அறிக்கையை 02.05.2024 அன்று மத்திய அரசிடம் சமா்ப்பித்தது. இது 31.05.2024 தேதியிட்ட ஒரு பிரமாணப் பத்திரத்துடன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிபுணா் குழுவின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என மத்திய அரசு பிரமாணப்பத்திரத்தில் கூறி உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments