FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்? அன்புமணி கேள்வி

சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.

23 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
அன்புமணி ராமதாஸ்
பகிர்:

சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் செளமியா அன்புமணி, சென்னையில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் அது வெளியிடப்படவில்லை.

அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தாா். அதற்குப் பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் செங்கோட்டையன், திருப்புகழ் குழுவின் அறிக்கையை திமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், ஏன் அவா்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மழை, வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு வெளியிடாதது தவறு. அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத்தான் அமைச்சரின் பதில் இருந்திருக்க வேண்டும்.

திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிா்வாகத் துறையை முதல்வா் விஜய்தான் நிா்வகித்து வருகிறாா். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதல்வரே மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments