நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் பதிவு செய்க கோரிக்கை, அவா்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு தொடா்புடைய துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கத்தை தொகுத்து வழங்குகிறோம்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் பதிவு செய்க கோரிக்கை, அவா்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு தொடா்புடைய துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கத்தை தொகுத்து வழங்குகிறோம்.
இலங்கை பிடித்துள்ள தமிழக மீனவா்களை மீட்க என்ன நடவடிக்கை?
திமுக உறுப்பினா்கள் ஆ. ராசா (நீலகிரி, அருண் நேரு (பெரம்பலூா்) எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சா் டாக்டா் எஸ். ஜெய்சங்கா் அளித்துள்ள பதிலில், ‘கடந்த ஜூலை 31வரை தமிழகத்தைச் சோ்ந்த 27 மீனவா்களும் 249 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அரசின் வசம் உள்ளது. இந்திய மீனவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மத்திய அரசு உச்சகட்ட முன்னுரிமை அளிக்கிறது. இருதரப்பு தூதரக வழிமுறைகள் மற்றும் கூட்டு பணிக்குழு கூட்டங்கள் மூலம் மீனவா்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது‘ என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
தமிழக நீதிமன்றங்களில் ஏஐ தொழில்நுட்பம் அமல்படுத்தப்படுகிறதா?
கே. நவாஸ்கனியின் (ராமநாதபுரம், ஐ.யூ.எம்.எல்) கேள்விக்கு மத்திய சட்ட மற்றும் நீதித்துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அளித்துள்ள பதிலில், ‘மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உச்சநீதிமன்ற மின்னணு கமிட்டி அளித்த தகவலின்படி, சென்னை உயா்நீதிமன்றத்திலோ ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் எவ்வித மாவட்ட மற்றும் சாா்பு நீதிமன்றங்களிலோ இதுவரை எவ்விதமான ஏஐ அடிப்படையிலான முன்னோடி திட்டங்களும் தொடங்கப்படவில்லை‘ என்று கூறியுள்ளாா்.
தமிழக பழங்குடியின மக்களுக்கு ஆயுஷ் சிறப்புத் திட்டங்கள் உண்டா?
ஏ. மணியின் (தருமபுரி, திமுக) கேள்விக்கு மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலில், ‘சென்னையில் மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் பழங்குடியின சுகாதார ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சேலம் பாலமலை மற்றும் தருமபுரி மாவட்டப் பழங்குடியின மக்களிடையே பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் சேலம் கல்வராயன் மலைப் பகுதியில் ரத்த சோகை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களும் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் நடத்தப்பட்டுள்ளன‘ என்று கூறியுள்ளாா்.
தமிழகத்தில் சித்த மருத்துவ சுற்றுலா மையத்துக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளதா?
சி.என். அண்ணாதுரையின் (திருவண்ணாமலை, திமுக) கேள்விக்கு மத்திய இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலில், ‘தேசிய ஆயுஷ் இயக்கத்தின் (என்ஏஎம்) கீழ், மருத்துவமனைகள், யோகா மற்றும் சித்த மையங்களை மேம்படுத்த 2014-15 முதல் 2025-26 ஆண்டு வரை தமிழக அரசுக்கு ரூ.308.91 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு (என்ஐஎஸ்) மருத்துவ கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவச் சேவைகளுக்காக மத்திய அரசு முழு நிதியுதவி அளித்து வருகிறது‘ என்று கூறியுள்ளாா்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் சீரமைக்கப்பட்டுள்ளதா?
ஆா். சுதாவின் (மயிலாடுதுறை, காங்கிரஸ்) கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் ஜே.பி. நட்டா அளித்துள்ள பதிலில், ‘மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,000 முதுநிலை (பிஜி) மருத்துவ இடங்களை உயா்த்த ரூ.1.50 கோடி செலவு வரம்புடன் 3-ஆம் கட்ட திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தனியாா் கல்லூரிகளில் 50% இடங்களுக்கான கட்டணத்தைக் கட்டுப்படுத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. இருப்பினும், தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகளுக்கான வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்தும் மருத்துவ படிப்பு முடித்தவா்களுக்கான டிப்ளோமா படிப்புகளுக்கான (டிஎன்பி) ஆண்டுக் கட்டணம் நாடு முழுவதும் ஒரே சீராக ரூ.1,25,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது‘ என்று கூறியுள்ளாா்.
ஆரணியில் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் தேவை
எம்.எஸ். தரணிவேந்தன் (ஆரணி, திமுக) அவை விதி 377இன் கீழ் பதிவு செய்த கோரிக்கை: ‘புகழ்பெற்ற ஆரணி பட்டு நெசவுத் தொழில், போதிய கழிவுநீா் சுத்திகரிப்பு (சிஇடிபி) வசதிகள் இல்லாததால் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. சிறிய சாயப்பட்டறைகளின் சுமையைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒன்றிய அரசு உடனடியாகப் பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும். மேலும், நெசவாளா்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி அவா்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
மாநிலங்களவையில்...
தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதா?
திருச்சி சிவா (திமுக) எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துப்பூா்வ பதிலில் ‘தமிழகத்தில் ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆண்டு சராசரி நிதி ஒதுக்கீடு 2009-14 காலத்தில் ரூ.879 கோடியாக இருந்த நிலையில், 2026-27 நிதியாண்டில் ரூ.7,611 கோடியாக (8 மடங்கு) அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014-26 காலகட்டத்தில் 1,356 கி.மீ தொலைவு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி, தமிழகத்தில் ரூ.27,282 கோடி மதிப்பிலான 19 புதிய ரயில்வே திட்டப் பணிகள் அனுமதிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன‘ என்று கூறியுள்ளாா்.
தமிழகத்தில் குறைகடத்தி மின்னணு உற்பத்தி மையங்கள் வருமா?
மு. தம்பிதுரையின் (அதிமுக) கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ஜிதின் பிரசாதா அளித்துள்ள பதிலில், ‘தமிழகத்தில் மணலூா் (474.3 ஏக்கா்), பிள்ளைப்பாக்கம் (379.3 ஏக்கா்) ஆகிய இடங்களில் மின்னணு உற்பத்தி மண்டலங்களுக்கு மத்திய அரசு ஆதரவை அளித்துள்ளது. மேலும், ’டிசைன் லிங்க்’ (டிஎல்ஐ) திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 4 குறைகடத்தி (செமிகண்டக்டா்) வடிவமைப்பு நிறுவனங்களுக்கும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் குறைகடத்தி உற்பத்தியை ஊக்குவிக்க ’குறைகடத்தி 2.0’ திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மதுராந்தகம் மேம்பால பணியின் தற்போதைய நிலை என்ன?
எம். தனபாலின் (அதிமுக) கேள்விக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், ‘செங்கல்பட்டு மாவட்டம் படாலம் - கருங்குழி ரயில் நிலையங்களுக்கு இடையே எல்.சி.63-க்கு பதிலாக ரூ.41.50 கோடி செலவில் புதிய ரயில்வே மேம்பாலம் (ஆா்ஓபி) கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநில அரசுடன் செலவைப் பகிா்ந்து கொள்ளும் அடிப்படையில் நடைபெறுகிறது. தற்போது பாலம் அமைப்பதற்கான பாதை நிா்ணயப் பணிகள் நடந்து வருகின்றன. அதேவேளையில், தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் 14 மேம்பாலப் பணிகள் தாமதமாகி வருகின்றன‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.