முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய முக்கிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்கள் வருமாறு...

Updated On : 24 ஜூலை 2026, 6:36 am IST
நாடாளுமன்றம்
பகிர்:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய முக்கிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்கள் வருமாறு...

மக்களவையில்

1) பிஎஸ்யு-சிஎஸ்ஆர் நிதி நிலவரம் என்ன?

Advertisement

Advertisement

கனிமொழி (திமுக) எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் அளித்துள்ள பதிலில், "மத்திய மின்சாரத் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் (பிஎஸ்யு) சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டங்களை உரிய வழிகாட்டுதல்களின்படி செயல்படுத்தி வருகின்றன. இதில் தமிழகத்தில் எந்தவிதமான திட்ட தாமதமோ அல்லது கூடுதல் செலவினங்களோ ஏற்படவில்லை. நிறுவன ரீதியிலான நிதி விவரங்கள் ஸ்ரீள்ழ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) மீட்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் எத்தனை?

மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்துள்ள பதிலில், "இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலப் பொருகளில் 2014 முதல் 2026 ஜூன் 30 வரையில் 655 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. கடத்தலைத் தடுக்க நினைவுச் சின்னங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பும், கடத்தல் புகார்களின் மீது உடனுக்குடன் தேடுதல் நடவடிக்கைக்கான அறிவிப்புகளும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3) நதிகள் இணைப்புத் திட்ட நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

கணபதி ராஜ்குமார், தங்க தமிழ்செல்வன் (திமுக) எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் செüதரி அளித்துள்ள பதிலில், "தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.34.74 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியது. அதன் பணி நிறைவடைந்தது. மேலும், பிரதமரின் க்ரிஷி சிஞ்சாயி யோஜனா மூலம் 571 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் தேனி மாவட்டம் 100% குடிநீர் இணைப்பு பெற்றுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

4) நீர் பாதுகாப்புத் திட்ட நிலை என்ன?

எம்.எஸ். தரணிவேந்தன் (திமுக) எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் செüதரி அளித்துள்ள பதிலில், "ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் 12,480 ஊராட்சிகள் பயன்பெற்றுள்ளன. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மழைநீர் சேகரிப்பு மற்றும் பாரம்பரிய நீர்நிலை சீரமைப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஆரணி தொகுதியில் மட்டும் 17,962 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அடங்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5) வேலூரில் குறு, சிறு தொழில்கள் வளர்ச்சி நிலவரம் என்ன?

டி.எம்.கதிர் ஆனந்த் (திமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே அளித்துள்ள பதிலில், "வேலூர் மாவட்டத்தில் பொறியியல் துறைக்கான பொது வசதி மையம் மற்றும் நான்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் ஆய்வின்படி, இத்திட்டம் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி திறன் மற்றும் தொழில்நுட்பத்தை உயர்த்தியுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில்

1) ஆன்மிக, கடற்கரை சுற்றுலாத் திட்டங்கள் விவரம் என்ன?

எம். தம்பிதுரை (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்துள்ள பதிலில், "பிரசாத் திட்டத்தில் காஞ்சிபுரம் (ரூ.13.99 கோடி), வேளாங்கண்ணி (ரூ.4.86 கோடி), நவதிருப்பதி/நவக்கிரக கோயில்களுக்கு (ரூ.40.94 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. "ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டத்தில் சென்னை-மாமல்லபுரம்-ராமேசுவரம்-கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலாவுக்கு ரூ.73.13 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரம் நந்தவனம் பூங்காவுக்கு ரூ.112.13 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) கடவுச்சிட்டை சேவை மையங்களின் நிலை என்ன?

ஆர். தர்மர் (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்துள்ள பதிலில், "கடந்த ஜூலை 17}ஆம் தேதி நிலவரப்படி, 4 மண்டல கடவுச்சிட்டை (பாஸ்போர்ட்) அலுவலகங்களில் தமிழகத்தில் 8 முதன்மை கடவுச்சிட்டை சேவை மையங்கள் (பிஎஸ்கே) மற்றும் 31 அஞ்சலக கடவுச்சிட்டை சேவை மையங்கள் (பிஓபிஎஸ்கே) செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து 39 மக்களவைத் தொகுதிகளும் கடவுச்சிட்டை சேவை வரம்புக்குள் முழுமையாகக் கொண்டுவரப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3) விமான நிலையங்களில் 100% பசுமை ஆற்றல் நிலவுகிறதா?

எல்.கே. சுதீஷ் (தேமுதிக) எழுப்பிய கேள்விகளுக்கு, விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்துள்ள பதிலில், "சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டிற்கு மாறியதன் மூலம், இந்தியாவில் உள்ள 106 விமான நிலையங்கள் 100% பசுமை ஆற்றலுக்கு மாறியுள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள 5 விமான நிலையங்களும், புதுச்சேரியில் உள்ள 1 விமான நிலையமும் அடங்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments