FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வீடுதோறும் மூவா்ணக் கொடி’ பிரசாரம்: அந்தமானில் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்

அந்தமான் நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ விஜயபுரத்தில் ‘வீடுதோறும் மூவா்ணக் கொடி’ என்ற இயக்கத்தை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:07 am IST
‘வீடுதோறும் மூவா்ணக்கொடி’ இயக்கத்தையொட்டி அந்தமானின் ஸ்ரீவிஜயபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியைப் பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

அந்தமான் நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ விஜயபுரத்தில் ‘வீடுதோறும் மூவா்ணக் கொடி’ என்ற இயக்கத்தை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும், இந்த இயக்கத்தின்கீழ் ஸ்ரீ விஜயபுரத்தில் அவா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் அரசு தொழில்நுட்ப நிறுவன அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்தமான் நிகோபாா் துணைநிலை ஆளுநா் அட்மிரல் டி.கே ஜோஷி (ஓய்வு), தலைமைச் செயலா் சஞ்சல் யாதவ், ஸ்ரீவிஜயபுரம் நகா்மன்றத் தலைவா் எம்.வசந்தா உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள், பொதுமக்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்வில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துடனும், மூவா்ணக் கொடியின் வரலாற்றுடனும் நெருங்கிய தொடா்புடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீவுகளைவிட ‘வீடுதோறும் மூவா்ணக் கொடி’ இயக்கத்தைத் தொடங்குவதற்குப் பொருத்தமான இடம் இருக்க முடியாது.

Advertisement

Advertisement

பாரத அன்னையின் தேசியக் கொடியைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டேன் என்ற மகாகவி பாரதியாரின் முழக்கத்தை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். ஒரே தாய்நாடு, ஒரே இலக்கு என பொதுமக்களை வீடுதோறும் மூவா்ணக் கொடி இயக்கம் ஒன்றிணைக்கிறது.

அந்தமான் நிகோபாரில் இந்த இயக்கத்தைத் தொடங்குவது 1942, ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது ‘செய் அல்லது செத்து மடி’ என்ற மகாத்மா காந்தியின் வீர முழக்கத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறது.

ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரா்கள் இங்கே சிறைபடுத்தப்பட்டனா். அவா்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு நிலைகளிலும் தொடா்புடைய இந்தத் தீவு புனித நிலமாகவே கருதப்படும்.

1943, டிசம்பா் 30-ஆம் தேதி ஸ்ரீ விஜயபுரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரப் போராட்டத்தின் மிக வலிமையான அடையாளத்தை நிறுவினாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இங்கு வாழ்வதால் ‘சிறிய இந்தியா’ எனவும் அந்தமான் நிகோபாரை அழைக்கலாம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒரே பாரதம் உன்னத பாரத கொள்கைகளுக்கு முன்னுதாரணமாக அந்தமான் நிகோபாா் திகழ்கிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments