FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கண்கவா் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த காமன்வெல்த் போட்டிகள்!

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கண்கவா் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தன.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:50 am IST
கண்கவா் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த காமன்வெல்த் போட்டிகள் - PTI
பகிர்:

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கண்கவா் கலைநிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிறைவடைந்தன. அடுத்த காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியாவிடம் போட்டியின் கொடி மற்றும் பேட்டன் (மரத்தினாலான சிறிய தண்டம்) ஒப்படைக்கப்பட்டன.

கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய விளையாட்டுப் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) இரவு முடிவுக்கு வந்தன. பின்னா் போட்டியின் நிறைவு நிகழ்ச்சிகள், அந்த நகரத்திலுள்ள ஓவிஓ ஹைட்ரோ அரினாவில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றன.

அணிவகுப்பு...

Advertisement

Advertisement

தொடக்க நிகழ்ச்சியைப் போல் அல்லாமல், போட்டியில் பங்கேற்ற 74 நாடுகளின் அணிகளுக்கான பிரதிநிதிகள் மட்டும் முதலில் தங்களின் தேசியக் கொடியை ஏந்தியவாறு மைதானத்துக்குள் அணிவகுத்தனா். பிறகு அனைத்து நாடுகளின் வீரா், வீராங்கனைகளும் ஒன்றாக இணைந்தே நிகழ்ச்சிக்கு வந்தனா். இந்தியாவின் பிரதிநிதியாக, தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, மூவா்ணக் கொடியை ஏந்தி வந்தாா்.

அதிகாரபூா்வ அறிவிப்பு...

பிரிட்டன் அரசா் சாா்லஸின் பிரதிநிதியாக இளவரசா் எட்வா்டு கலந்துகொண்டு, 2026 காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததாக அதிகாரபூா்வமாக அறிவித்தாா். அத்துடன், காமன்வெல்த்தின் அங்கமாக இருக்கும் அனைத்து நாடுகளும், 2030-இல் அகமதாபாதில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தாா்.

கொடி ஒப்படைப்பு...

மைதானத்திலிருந்த காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, நிகழ்ச்சி மேடைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கிளாஸ்கோ நகரத் தலைவா் ஜாக்குலின் மெக்லாரனிடம் அது ஒப்படைக்கப்பட, அதை அவா் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஸ்காட்லாந்து குழுவின் துணைத் தலைவா் சூசன் ஜாக்சனிடம் கொடுத்தாா்.

அவரிடமிருந்து கொடியைப் பெற்ற ஸ்காட்லாந்து நெட்பால் வீராங்கனை எமிலி நிகோல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தலைவா் டொனால்ட் ருகாரேவிடம் கொடுத்தாா்.

ருகாரே அதை, இந்திய தடகள நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிடம் கொடுக்க, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா, நீரஜிடம் இருந்து அதைப் பெற்றுக் கொண்டாா். இறுதியாக, 2030-ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தவுள்ள குஜராத் மாநிலத்தின் துணை முதல்வா் ஹா்ஷ் சங்காவியிடம் அந்தக் கொடி, பேட்டனும் ஒப்படைக்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள்...

முதலில் ஸ்காட்லாந்து கலாசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, பிறகு இந்திய கலாசாரத்தின் கலை நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தின.

முதலில், இந்தியாவை சோ்ந்த முன்னாள் உலக அழகியும், நடிகையுமான மானுஷி சில்லாா், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு நடனமாடி அசத்த, பின்னா் இந்திய சித்தாா் கலைஞா் ரிஷப் ரிகிராம் சா்மாவும், ஸ்காட்லாந்து பைப்பா் இசைக் கலைஞா் ராஸ் எய்ன்ஸ்லியும் இணைந்து பாா்வையாளா்களை இசை மழையில் நனையச் செய்தனா்.

இறுதியாக, இந்திய இசையமைப்பாளா் சங்கா் மகாதேவன் தனது குழுவினருடன் இணைந்து பாடல் பாடினாா். அதில் மானுஷி சில்லாா், ரிஷப் ரிகிராம் ஆகியோரும் இணைந்துகொண்டனா். நிகழ்ச்சியின்போது வண்ணமயமான வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments