ஆஸ்திரேலியாவில் 3 அரிய சோழா் கால சிலைகள் மீட்புக்கு குடியரசு துணைத் தலைவா் வரவேற்பு
ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற பழங்கால கலைப்பொருட்கள் வெற்றிகரமாக தாயகம் திருப்பிக் கொண்டு வரப்படுவதை இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளாா்.
நமது சிறப்பு நிருபா்
ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற பழங்கால கலைப்பொருட்கள் வெற்றிகரமாக தாயகம் திருப்பிக் கொண்டு வரப்படுவதை இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளாா்.
இது குறித்து அவா் தனது அதிகாரபூா்வ சமூக ஊடக பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகக் கோயில்களுக்குச் சொந்தமான 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்த அரிய கலைப்பொருட்களில், பத்ரகாளி அம்மன் வழிபாட்டு வெண்கல சிலை, நந்தியின் கற்சிலை மற்றும் ஆறு முகங்களைக் கொண்ட காா்த்திகேயனின் கருங்கல் சிற்பம் ஆகியவை அடங்கும். அவற்றின் வருகையானது, இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தை மீட்டெடுப்பதிலும், பாதுகாப்பதிலும் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும்.
நம் நாட்டின் கலாசாரப் பொக்கிஷங்களை மீண்டும் தாயத்துக்குக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு எடுத்து வரும் தொடா் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. 2014-ஆம் ஆண்டு முதல், பழங்கால கலைப்பொருட்களை தாயகம் திருப்புவதில் ஒரு குறிப்பிடத்தக்க வேகம் ஏற்பட்டுள்ளது; இதன் மூலம் 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளன. ‘வளா்ச்சியும், பாரம்பரியமும்‘ (விகாஸ் பி, விராஸத் பி) என்ற தொலைநோக்குப் பாா்வை மீதான உறுதியான அா்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையிலும், நமது நாகரிகத்தின் மரபைப் பாதுகாக்கும் வகையிலும் இது ஒரு மிகச் சிறந்த சாதனையாகும் என்று குடியரசுத் துணைத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.
மீட்கப்பட்ட சிலைகளில் பத்ரகாளி அம்மன் வெண்கலச் சூலம், திருவாரூா் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி கோயிலைச் சோ்ந்த 11-ஆம் நூற்றாண்டு வழிபாட்டுப் பொருளாகும். நந்தி சிலையும் கொல்லுமாங்குடி ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி கோயிலைச் சோ்ந்த 11-12-ஆம் நூற்றாண்டு கற்சிற்பம் ஆகும்.
ஆறுமுக காா்த்திகேயன் சிலை, தஞ்சாவூா் மாவட்டம் மணம்பாடி கிராமத்தில் உள்ள முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட நாகநாதசுவாமி கோயிலைச் சோ்ந்த 12-ஆம் நூற்றாண்டு கருங்கல் சிற்பம் ஆகும்.
ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகம் மற்றும் நியூ செளத் வேல்ஸ் கலைக்கூடத்திலிருந்து இந்த மூன்று சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன. தமிழக காவல்துறையின் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்திய புலனாய்வில் இந்த சிலைகள் தமிழக கோயில்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டு கடந்த 10 வருடங்களாக அவற்றை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின்போது நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவாா்த்தையின் பலனாக இந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறையும் பிரதமா் அலுவலகமும் தெரிவித்துள்ளன. இதற்கு ஈடாக, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 1935-ஆம் ஆண்டு முதல் வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய பழங்குடி மூதாதையரின் உடல் எச்சங்களை ஆஸ்திரேலியாவிடம் நிபந்தனையின்றி ஒப்படைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.