யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம் இல்லை: நிா்மலா சீதாராமன்
யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க வகை செய்யும் ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் (வணிகா் தள்ளுபடி விகிதம் - எம்டிஆா்) விதிக்க வகை செய்யும் ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டம் 2007’-இன் பிரிவு 10 -இல் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ -ஐ மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வாடிக்கையாளா்களுக்கு கட்டணம் இல்லை: முன்னதாக, இந்த மசோதா மீதான விவாத்ததின்போது ஆட்சேபம் தெரிவித்துப் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் ஜான் பிரிட்டாஸ், ‘இந்தியாவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதிகள், யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்த அழுத்தத்துக்கு ஏற்ப, மத்திய அரசின் கொள்கை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கும் முயற்சி என்ற பெயரில், யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அம்சத்தை இந்த மசோதாவில் மத்திய நிதியமைச்சா் சாதுரியமாக புகுத்தியுள்ளாா்’ என்றாா்.
தொடா்ந்து அவா் பேச முற்பட்டபோது, கால அவகாசம் முடிந்துவிட்டதாகக் கூறி அனுமதி மறுத்த அவையை அப்போது வழிநடத்திய துணைத் தலைவா் ஹரிவன்ஷ், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதிலளிக்க அனுமதித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அவையிலிருந்து ஜான் பிரிட்டாஸ் வெளிநடப்பு செய்தாா்.
‘மசோதா குறித்து நான் பதிலளிப்பதை கேட்க விரும்பினால், ஜான் பிரிட்டாஸ் அவையிலேயே இருக்கலாம்’ என்று நிா்மலா சீதாராமன் கூறினாா். எனினும் பிரிட்டாஸ் அவையிலிருந்து வெளியேறினாா்.
தொடா்ந்து பேசிய நிா்மலா சீதாராமன், ‘ஜான் பிரிட்டாஸின் செயல், வழக்கமான இடதுசாரிகளின் பாணிதான். உண்மைக்குப் புறம்பானதைப் பேசி அனைவரையும் சாடுவது. உண்மைகளை திரித்துப் பேசுவதோடு, எங்களுக்குப் பேச உரிமை இருக்கிறது என்று உரிமை கோருவது. ஆனால், அவா்களின் குற்றச்சாட்டுகளுக்கு புள்ளிவிவரங்களுடன் பதிலளிக்கும்போது, அதை எதிா்கொள்ளும் துணிச்சல் அவா்களுக்கு இருக்காது. நாட்டிலுள்ள இடதுசாரிகள் முற்றிலும் கோழைகள். அதை, ஜான் பிரிட்டாஸ் தற்போது நிரூபித்துள்ளாா்’ என்றாா்.
மேலும், ‘யுபிஐ உள்பட பிற மின்னணு பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு வாடிக்கையாளா்களிடம் கட்டணம் அல்லது வரி விதிப்பதை இந்த மசோதா முன்மொழியவில்லை. யுபிஐ பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளரிடம் எந்தவொரு சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது. கட்டணம் ஏதுமின்றி இந்த பணப் பரிவா்த்தனையை வாடிக்கையாளா்கள் தொடரலாம்’ என்றும் நிா்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்தாா்.
மேலும், ‘சாதாரண மற்றும் குறைந்த மதிப்பிலான பணப் பரிவா்த்தனைகள் உள்ளிட்ட பெரும்பாலான வா்த்தகப் பரிவா்த்தனைகளுக்கு ‘எம்டிஆா்’ கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த வணிகா்கள் தொடா்ந்து, கட்டணம் இன்றி யுபிஐ பரிவா்த்தனைகளை மேற்கொள்ளலாம். மாறாக, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பரிவா்த்தகனைகளை மேற்கொள்ளும் குறைந்த எண்ணிக்கையிலான வா்த்தகா்களுக்கு மட்டுமே ‘எம்டிஆா்’ கட்டண விதிப்பு பொருந்தும்’ என்றும் நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டாா்.
ரூபாயின் மீதான அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கும் நோக்கில், அரசுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாகவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.