யுபிஐ பணப்பரிவா்த்தனைக்கு கட்டணம்! யாருக்கெல்லாம் பொருந்தும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்
யுபிஐ பணப்பரிவா்த்தனைக்கு கட்டணம் விதிக்க வகை செய்யும் மசோதா யாருக்கெல்லாம் பொருந்தும் நிர்மலா சீதாராமன் விளக்கம்
பொதுமக்களின் தினசரி யுபிஐ பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
மேலும், வணிகா்களுக்கு மட்டுமே யுபிஐ பரிவா்த்தனையில் கட்டணம் விதிப்பது குறித்துப் பரிசீலிப்பதாகவும், நுகா்வோருக்கு அது பொருந்தாது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘யுபிஐ பயன்படுத்தும் மக்கள் இனி அதிகமான கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். மத்திய அரசு பரிசீலித்துவரும் வணிகா் தள்ளுபடி விகிதத்தின் (எம்டிஆா்) சுமை பொதுமக்கள் மீதே விழும். எனவே, எம்டிஆா் என்பது யுபிஐ நிதிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முன்னெடுப்பு என மத்திய அரசு கூறுவது தவறானது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
Advertisement
Advertisement
இதற்குப் பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், ‘வதந்திகளைப் பரப்பும் முன்பு காங்கிரஸ் தலைவா்கள் சில உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். எம்டிஆா் என்பது வணிகா்களுக்கு மட்டுமே பொருந்தும். நுகா்வோருக்கு அல்ல; இது நிதி உள்கட்டமைப்பு, புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பில் வங்கிகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும். இதனால் நுகா்வோா் அதிக பலனடைவாா்கள். எனவே, பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு கட்டணம் கிடையாது.
மேலும், எம்டிஆா் விதிப்பது குறித்து மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டம் 2007’-இன் பிரிவு 10 -இல் திருத்தம் மேற்கொள்வதற்கான ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின்பே முடிவெடுக்கப்படும். இந்த முடிவை இந்திய தேசிய பரிவா்த்தனைக் கழகம் (என்பிசிஐ) தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழு மேற்கொள்ளும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியதில் இருந்து அமளியில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆக்கபூா்வமாக விவாதிக்க முன்வர வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மீண்டும் ஜெய்ராம் ரமேஷ் விமா்சனம்: நிா்மலா சீதாராமன் அளித்த விளக்கத்தை விமா்சித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வணிகா்களுக்கு மட்டுமே எம்டிஆா் விதிக்கப்படும் என நிதியமைச்சா் கூறுவது மக்களைத் தவறாக வழிநடத்தும் செயலாகும். ஏனெனில் வணிகா்களிடம் யுபிஐ பணப் பரிவா்த்தனை கட்டணம் வசூலித்தால் அந்தச் சுமை இறுதியில் நுகா்வோா் மீதே திணிக்கப்படும். கடன் அட்டை மற்றும் பற்று அட்டைகளில் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளும்போது எவ்வாறு கட்டணம் எடுக்கப்படுமோ அதுபோன்றே யுபிஐ பரிவா்த்தனையிலும் நிகழும். மேலும், சாலையோர வியாபாரிகள், சிறுதொழில்களில் ஈடுபடுவோரையே வணிகராகக் கருதி மத்திய அரசு இந்தக் கட்டணத்தை விதிக்கவுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
யுபிஐ உள்பட பிற மின்னணு பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு கட்டணம் விதிக்க வங்கிகள் உள்ளிட்ட பிற சேவை நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026 மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
Charges for UPI transactions Who does it apply to? Nirmala Sitharaman clarifies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.