FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

யுபிஐ கட்டணம்! யார்? எவ்வளவு செலுத்த வேண்டும்? - முழு விவரம்

யுபிஐ கட்டணத்தை யார் செலுத்த வேண்டும், எந்தத் தொகைக்கு எவ்வளவு என்பது பற்றிய முழு விவரம்

17 செப்டம்பர் 2026, 12:15 pm IST
யுபிஐ கட்டணம் - IANS
பகிர்:

நாடு முழுவதும் யுபிஐ அல்லது டெபிட் கார்டுகள் மூலம் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவீத எம்டிஆா் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வழக்கம்போலவே, பெரிய பெரிய கோடீஸ்வரர்களையும் லட்சாதிபதிகளையும் பாதிக்காத வகையில், சாதாரண மக்கள் செலுத்தும், வாங்கும் தொகைக்கு மட்டும்தான் இந்த கட்டணம்.

இது பற்றி முழுமையான விளக்கங்கள் இன்னும் வணிகர்களை சென்றடையவில்லை என்றே கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

யுபிஐ மூலம் பணம் பெறுவதற்கு, வணிகர்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?

இதற்கு மத்திய அரசு கொடுக்கும் விளக்கத்தில், நாடு முழுவதும் கடந்த 2016-ஆம் ஆண்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது உலகின் மிகப் பெரிய நிகழ்நேர எண்மப் பரிவா்த்தனை தளமாக அசுர வளர்ச்சியடைந்துள்ளது.

2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் 2,450 கோடி முறை பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்த அமைப்புமுறையை சுயநிலைத்தன்மை கொண்டதாக, பாதுகாப்பானதாக, புத்தாக்கம் நிறைந்ததாக பராமரிக்கும் வகையில், அதிக மதிப்புடைய வணிகப் பணப் பரிவா்த்தனைகளுக்கு சிறிய கட்டணம் விதிக்கப்படும். இது, சிறப்பான உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு, சிறிய வணிகா்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க உதவும் என்று கூறுகிறது.

யாருக்கு செல்லும் இந்தத் தொகை?

இந்த தொகையை மத்திய அரசோ, இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனமோ (என்பிசிஐ) வசூலிக்காது. வங்கிகள், கட்டணச் செயலி வழங்குநா் உள்பட அனைத்து பங்கேற்பாளா்களுக்கும்தான் பிரித்தளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் கொடுக்கிறது.

எதற்கு கட்டணம் இல்லை?

ஒரு தனி நபர், மற்றொரு தனி நபருக்கு யுபிஐ மூலம் செலுத்தும் தொகைக்கு கட்டணம் இல்லை.

எந்த வணிகர்களிடமும் ரூ.2000க்கும் குறைவாக பொருள் அல்லது சேவையைப் பெறும்போது கட்டணம் இல்லை.

யாருக்குக் கட்டணம் கிடையாது?

ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ முறைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. வணிகர்கள்தான் இந்த கட்டணத்தை செலுத்துவார்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.2000க்கும் மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 0.4 சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் ரூ.3000 பொருள் அல்லது சேவை பெறும்போது, அந்தத் தொகை யுபிஐ மூலம் செலுத்தினால், அதற்கு வணிகர் ரூ.12 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். ஒரு வேளை ரூ.50 ஆயிரத்துக்கு பொருள்கள் வாங்கினால் அதற்கு வணிகர் ரூ.200 கட்டணமாக செலுத்துவார். ஆனால் இப்படியே லட்சம் லட்சம் லட்சமாக உயரும்போது கட்டணம் உயருமா என்றால் இல்லை.

அதிகபட்ச கட்டணம் எவ்வளவு?

ரூ.75,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு அதாவது, எத்தனை லட்சமாக இருந்தாலும் அதிகபட்சம் ரூ.300 கட்டணம்தான் பெற முடியும். அதற்கு மேல் அதிக தொகை வசூலிக்க முடியாது. அதாவது, ரூ.300 உச்சவரம்பாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிலையான கட்டணம் உள்ளதா?

ரயில்வே, தொலைத்தொடா்பு, பெட்ரோல் நிலையம் போன்ற எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பொருத்தவரை, ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு நிலையாக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். எவ்வளவு தொகையை யுபிஐ மூலம் செலுத்தினாலும் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். அதைவிட கூடுதலாக செலுத்தும் நிலை இருக்காது.

விதிவிலக்கும் உண்டு!

யுபிஐ க்யூஆா் கோடு மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டும் சிறு வணிகா்களுக்கு கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

யார் செலுத்துவார்கள்?

மேற்கூடிய எந்தக் கட்டணங்களையும் மக்களிடம் வசூலிக்கக் கூடாது, வணிக நிறுவனங்கள்தான் செலுத்த வேண்டும்.

வழக்கம்போலத்தானா?

ஆம், வழக்கம்போலவே ஏழை, எளிய மக்கள் செலுத்தும் தொகைக்கு மட்டுமே இந்த கட்டணம். பணக்காரர்களையோ கோடீஸ்வரர்களையோ பாதிக்காது. ரூ.75 ஆயிரம் வரை மட்டுமே இந்த 0.4 சதவிகித கட்டணம். அதற்கு மேல் சென்றால் பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ரூ.300 என்பது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. எத்தனை கோடிக்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். ரூ.300 மட்டும் கட்டணம்.

நேரடியாக இதனை மக்கள் செலுத்தப் போவதில்லை என்றாலும் மறைமுகமாக இது மக்கள் தலையில் விழப்போவது உறுதி. அப்படியிருக்க குறைந்தத் தொகைக்குக் கட்டணம், அதிகத் தொகைக்கு உச்ச வரம்பு என்பது யார் மனநிலையிலிருந்து எடுக்கப்படும் நிலைப்பாடு என்பதே மக்கள் கேள்வி.

எப்போது நடைமுறைக்கு வரும்?

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட இந்த கட்டண வசூல் திட்டம், வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி என்னவாகும்?

யுபிஐ கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகே, வணிகர்கள் / மக்களிடையே இது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிய முடியும். வணிகர்கள், இந்த சுமையை தாங்குவார்களா? வாடிக்கையாளர்கள் மீது மறைமுகமாக ஏற்றுவார்களா? இது முதல் கேள்வி.

அல்லது ரூ.2,000க்கு மேற்பட்ட கட்டண ரசீதுகள், இரண்டு பில்களாக பிரித்துப்போடப்படுமா? வாடிக்கையாளர்கள் ரூ.2000 வரை யுபிஐ மூலமும் அதற்கு மேற்பட்ட தொகையை பணமாகவும் செலுத்த வலியுறுத்தப்படுவார்களா? யுபிஐ மூலம் பணம் செலுத்த கெடுபிடிகள் விதிக்கப்பட்டு மீண்டும் பணமாக செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்களா? என்பது அடுத்த கேள்வி.

இல்லை, இல்லை, இதுவரை மத்திய, மாநில அரசுகள் விதித்த எத்தனையோ சுமைகளைத் தாங்கிக் கொண்ட வணிகர்கள் / மக்கள், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கௌண்டமணி வசனம்போல தாங்கிக் கொள்வார்களா? என்றெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

summary

UPI Payments! Who needs to pay? How much? - Full details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments