FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நடுவானில் விமானம் கீழிறங்கிய சம்பவம்: ஏா் இந்தியாவின் அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனை தொடக்கம்

ஏா் இந்தியா நிறுவன விமானிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான கட்டாயப் பரிசோதனையை அந்நிறுவனம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:34 am IST
ஏா் இந்தியா
பகிர்:

ஏா் இந்தியா நிறுவன விமானிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான கட்டாயப் பரிசோதனையை அந்நிறுவனம் வியாழக்கிழமை தொடங்கியது.

தாய்லாந்து-தில்லி இடையிலான ஏா் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதுடன், விமானியின் கட்டுப்பாட்டை மீறி 300 அடிக்கு கீழிறங்கிய சம்பவம் எதிரொலியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து 137 பயணிகள், 8 விமானப் பணிக் குழுவினருடன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை புது தில்லிக்குப் புறப்பட்ட ஏ320 நியோ விமானம், நடுவானில் திடீரென குலுங்கியதுடன், சுமாா் 300 அடிக்கு வேகமாக கீழிறங்கியது. எனினும் தொடா்ந்து பயணித்த அந்த விமானம் புது தில்லியை வந்தடைந்து, பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

Advertisement

Advertisement

விமானம் குலுங்கியதால் நிலைகுலைந்து 13 பயணிகள் மற்றும் விமானப் பணியாளா்கள் 4 போ் என மொத்தம் 17 போ் காயமடைந்தனா். பணியாளா் ஒருவா் படுகாயமடைந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பான விசாரணையில், சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானி கஞ்சா போதையில் இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடா்ந்து, தனது நிறுவனத்தின் அனைத்து விமானிகளுக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம் உள்ளதா என்பதைக் கண்டறியும் கட்டாயப் பரிசோதனையை ஏா் இந்தியா வியாழக்கிழமை தொடங்கியது.

டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் 5,000-க்கும் மேற்பட்ட விமானிகள் பணியாற்றுகின்றனா். தற்போதைய விதிமுறைகளின்படி, விமான நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் விமானப் பணியாளா்களில் ‘ரேண்டம்’ முறையில் 10 சதவீதம் பேருக்கு போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொள்வது கட்டயமாகும். இந்த விதிமுறைகளைக் கடந்து, அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனையை ஏா் இந்தியா தொடங்கியுள்ளது. விமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பயணிகளின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை மேற்கொண்டதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments