FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

நடுவானில் குலுங்கிய விமானம்! சாலைபோல வானிலும் மேடு பள்ளங்களா? என்ன நடந்தது?

சாலை போல வானிலும் மேடு பள்ளங்களா இருக்கிறது, நடுவானில் விமானம் குலுங்கியது ஏன் என்பது பற்றி..

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:54 pm IST
நடுவானில் குலுங்கிய தில்லி விமானம் - x
பகிர்:

2 நாள்களுக்கு முன்பு, நடுவானில் ஏா் இந்தியா விமானம் குலுங்கி, விமானியின் கட்டுப்பாட்டை மீறி 300 அடி திடீரென கீழிறங்கியதால், விமானத்தில் பயணித்த 17 போ் காயமடைந்தனர் என்ற தகவல், விமானத்தில் பயணிக்காதவர்களுக்கும்கூட அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் இந்திய விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றுக்கு இடையே இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

அதாவது, தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து 137 பயணிகள், 8 விமானப் பணிக்குழுவினருடன் செவ்வாய்க்கிழமை காலை புது தில்லிக்குப் புறப்பட்ட ஏ320 நியோ விமானம், நடுவானில் காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக திடீரென குலுங்கி, சுமாா் 300 அடி வேகமாகக் கீழிறங்கியது. எனினும் தொடா்ந்து பயணித்த அவ்விமானம் புது தில்லி வந்தடைந்து, பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

Advertisement

Advertisement

இந்தக் குலுக்கத்தால் நிலைகுலைந்து 13 பயணிகள், விமான பணிக்குழுவைச் சோ்ந்த 4 போ் என மொத்தம் 17 போ் காயமடைந்தனா். இதில் பணிக்குழுவைச் சோ்ந்த ஒருவா் படுகாயமடைந்தாா். காயமடைந்த அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

விமான விபத்து என்பது வேறு, ஆனால், இந்த காற்றோட்ட மாறுபாட்டால் ஏற்படும் குலுக்கம் என்பது வேறு. இனி எதிர்காலத்தில் அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் எப்போதாவது ஒருமுறையாவது இதனை எதிர்கொள்ள நேரிடும். சில வேளைகளில் இது துயரமான பயணமாகவும் மாற்றலாம்.

புகேட் - தில்லி இடையிலான இந்த விமானச் சேவை, இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூலை மாதத்தின் நடுப்பகுதி வரை இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் நேரிட்டிருப்பது, காலநிலை மாறுபாடு தீவிரமாகியிருப்பதை உணர்த்துவதாக உள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விமானம் குலுங்கியது இதுதான் முதல்முறையா என்றால் இல்லை, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் 37,000 அடி உயரத்தில் இருக்கும்போது குலுங்கி, பொருள்கள் பயணிகள் மீது சிதறி பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

2024ஆம் ஆண்டு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் லண்டனிலிருந்து சிங்கப்பூர் செல்லும்போது நடுவானில் குலுங்கியதால், ஏற்கனவே இதய பிரச்னை இருந்த பயணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஒன்றல்ல இரண்டல்ல 80 பயணிகள் காயமடைந்தனர். இதுவரை நிகழ்ந்த விமான குலுங்கல் சம்பவத்தில் இதுதான் மோசமானதாக பதிவாகியிருக்கிறது.

அதாவது, 2009 முதல் 2024ஆம் கால கட்டம் வரை, இதுபோன்ற விமான குலுங்கிய சம்பவத்தில் மட்டும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200க்கும் அதிகம் என்றால் பாருங்கள்.

ஏன் இப்படி நிகழ்கிறது?

விமானப் போக்குவரத்துத் துறையில் இதுபற்றி கூறப்படுவது என்னவென்றால், விமான குலுங்கல் சம்பவம் என்பது இரண்டு விதங்களில் நிகழ்கிறது.

ஒரு வகையை விமானத்தை இயக்கும் விமானிகள் முன்கூட்டியே கணிக்கக் கூடியது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத நடுப்பகுதி வரை இந்தியத் துணைக்கண்டம் வெப்பமாக இருக்கும்.

வானில் இருக்கும் ​​ஈரப்பதம் நிறைந்த காற்று குளிர்ந்த அடுக்குகளுக்குள் மேல்நோக்கித் தள்ளப்படுகிறது. இது, சில ஆயிரம் அடி முதல் 50,000 அடிக்கும் மேல் வரை நீளும்போது எந்த விமானத்தையும் நிலைகுலையச் செய்யும் கோபுர வடிவ திரள் மேகங்களை உருவாக்குகின்றன.

இந்த கோபுர வடிவ திரள் மேகங்களுக்குள் கடுமையான மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய காற்றுகள், மின்னல் - ஆலங்கட்டி மழையைக் கொடுக்கும் மேகங்கள் உள்ளடங்கியிருக்கும்.

இந்த கோபுர வடிவ திரள் மேகங்களை விமானிகளால் முன்கூட்டியே பார்க்க முடியும். இவற்றை புயல் கோடு என்று அழைப்பார்கள். இவை பொதுவாக பகல் அல்லது மாலையில் திடீரென தோன்றுகின்றன. இவற்றை விமானிகள் முன்கூட்டியே பார்த்து வழியை சற்று மாற்றியமைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், இரண்டாவது வகை மிகவும் அபாயகரமானது. இது மிகத் தெளிவான மேகக் கூட்டங்களின் காற்றுசுழற்சி மாறுபாடு.

ஒரு ஆற்றோட்டத்தைப் போன்ற மேகக் கூட்ட நகர்வு திடீரென தோன்றி மிக வேகமாக ஜெட் வேகத்தில் மேல்நோக்கி நகர்ந்து, மேகக் கூட்டங்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக இந்த காற்று சுழற்சி, 15 ஆயிரம் அடிக்கு மேல் தோன்றலாம். வெறும் கண்களால் பார்க்க முடியாது. மிகவும் தெளிவான மேகக் கூட்டம் என்பதால் முன்கூட்டியே அறிய முடியாது. எனவே, விமானிகள் அறையிலிருந்து இதனை கண்டறிந்து முன்கூட்டியே பாதையை மாற்றும் வாய்ப்புகள் இல்லவே இல்லை. விமான ரேடார்களிலும் தென்படுவதில்லை. எனவே, இது நிகழும்போது எதிர்பாராத வகையில் விமானம் சிக்கினால் விமான குலுங்கலை சந்திக்கத்தான் நேரிடும்.

இது பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களுக்கு மேல் நிகழ்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மாறி வரும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக இந்த காற்று மாறுபாடு அவ்வப்போது நேரிடலாம், சாலை போல விமானப் பாதையிலும் மேடு-பள்ளங்களை எதிர்கொள்ளும் காலம் எதிர்வருவதால் இனி அடிக்கடி இந்த சம்பவங்கள் நேரிடும் அபாயமும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

ஆனால், விமானப் பயணிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்துகொண்டு பயணிப்பது இதுபோன்ற சிக்கல்களின்போது குறைந்தபட்ச அபாயத்திலிருந்து தப்புவிக்கும் ஒரே உபாயமாக இதுவரை உள்ளது என்பதே பரவைலாக கருத்து.

summary

Plane jolted mid-air sky just like road What happened?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments