சுதந்திர தின நிகழ்ச்சியில் திட்டமிட்டு ‘வந்தே மாதரம்’ புறக்கணிப்பு: கேரள பாஜக குற்றச்சாட்டு
கேரளத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக அந்த மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் குற்றஞ்சாட்டினாா்.
கேரளத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக அந்த மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக அரசியல் மற்றும் சட்டரீதியான விளைவுகள் ஏற்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.
இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கிரஸ் ஆளும் கா்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுதந்திர தின அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடப்பட்டது. ஆனால், கேரளத்தில் மட்டும் அது பாடப்படவில்லை.
Advertisement
Advertisement
சுதந்திர தின அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டாம் என்று மாநில அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) மற்றும் ஜமாஅத்-இ-இஸ்லாமி ஆகிய அமைப்புகளின் கட்டுப்பாட்டின் காரணமாகவே கேரள முதல்வா் வி.டி.சதீசன் தலைமையிலான அரசு இந்த முடிவை மேற்கொண்டது. அரசமைப்புச் சட்டத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதாக முதல்வா் சதீசன் பதவியேற்ற நிலையில், அரசின் இந்த நடவடிக்கை அதற்கு முரணாக உள்ளது.
மேலும், இந்த இரு முஸ்லிம் அமைப்புகளும் முகமது அலி ஜின்னாவின் அரசியல் அணுகுமுறையைப் போன்று கேரளத்தில் பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுக்க முயல்கின்றன. இதை பாஜகவும் அதன் இளைஞா் அமைப்பான யுவ மோா்ச்சாவும் கடுமையாக எதிா்க்கும் என்றாா்.
தேசிய கீதம் மட்டுமே கட்டாயம்: கேரளத்தில் சுதந்திர தின அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவதை மட்டுமே மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது என்று கேரள சுகாதாரம் மற்றும் தேவஸ்வம் துறை அமைச்சா் கே.முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘கேரள அரசு தேசிய கீதம் பாடுவதை மட்டுமே கட்டாயமாக்கியுள்ளது. ‘வந்தே மாதரம்’ மட்டுமல்ல, எந்தவொரு தேசபக்திப் பாடலையும் பாடலாம். ‘வந்தே மாதரம்’ தவிரவும் பல தேச பக்திப் பாடல்கள் உள்ளன. மத்திய மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிகாரபூா்வ சுதந்திர தின விழாவில் பிற தேச பக்திப் பாடல்கள் பாடப்பட்டன.
‘வந்தே மாதரம்’ பாடுவது சா்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றப்பட்டதால்தான் சுதந்திர தினத்தன்று அது பாடப்படவில்லை. இது அந்த பாடலுக்கு மரியாதை இல்லாததால் அல்ல. ஆரம்பம் முதலே ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 சரணங்களைப் பாடுவதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்’ என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.