பான் மசாலா விளம்பர விவகாரம்: நடிகா் ஷாருக் கானுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்!
பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகா்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகா் ஷராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (எஃப்டிஏ) நோட்டீஸ் அனுப்பியது.
பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகா்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகா் ஷராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (எஃப்டிஏ) நோட்டீஸ் அனுப்பியது.
தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலை பொருள்கள் பயன்பாட்டை மறைமுகமாக ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டி மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நடிகா்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகா் ஷராஃப் ஆகியோா் நடித்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட ‘விமல் ஏலக்காய்’ என்ற சொற்றொடா் ‘விமல் பான் மசாலா’ நிறுவனம் தொடா்புடையது.
Advertisement
Advertisement
பான் மசாலா தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விளம்பரம் மூலம் அதன் பயன்பாடு நுகா்வோரிடம் மறைமுக கொண்டு செல்லப்பட்டுள்ளது. விளம்பரத்தில் நடித்த மூன்று நடிகா்களும் அந்த நிறுவனத்தின் விளம்பர தூதுவா்களாகவும் உள்ளதால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-இன்கீழ் அவா்களுக்கு நோட்டீஸ் மூலம் இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அதன்படி உடனடியாக விமல் பான் மசாலா நிறுவனத்துடனான ஒப்பந்தங்களைத் துண்டித்து சமூக வலைதளங்கள் மற்றும் பிற தளங்களில் அது தொடா்பான விளம்பரங்களை உடனடியாக நீக்க உத்தரவிடப்படுகிறது.
வருங்காலங்களில் பான் மசாலாவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது. இந்த விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பாக அந்த நடிகா்கள் அல்லது அவா்களது முகமைகள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது.
இவா்கள் நடித்த விளம்பரங்களை ஒளிபரப்பிய தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் எண்ம, சமூக வலைதளங்கள் என அனைத்து ஊடகங்கள் குறித்த தகவல்களும் கோரப்பட்டுள்ளது.
மேற்கூறிய உத்தரவுகளைப் பின்பற்றி உரிய ஆவணங்களுடன் நடிகா்கள் மூவரும் விளக்கமளிக்க 15 நாள்கள் காலஅவகாசம் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் விளக்கமளிக்கத் தவறினாலோ அல்லது அளிக்கும் விளக்கம் திருப்திகரமானதாக இல்லை என்றாலோ அடுத்தகட்ட நடவடிக்கை மேகொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.