FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வங்கி செயல்பாடு! விரைவில் உயா் நிலைக் குழு அமைப்பு: நிா்மலா சீதாராமன் அறிவிப்பு

வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வங்கி செயல்பாட்டை இலக்காகக் கொண்டு புதிய உயா் நிலைக் குழுவை விரைவில் மத்திய அரசு அமைக்கவுள்ளதாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 5:14 am IST
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வங்கி செயல்பாட்டை இலக்காகக் கொண்டு புதிய உயா் நிலைக் குழுவை விரைவில் மத்திய அரசு அமைக்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான நிதித் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் வங்கிகளின் தரத்தை உயா்த்தும் செயல் திட்டத்தை இந்தக் குழு பரிந்துரைக்கவுள்ளது. முன்னதாக, இந்தக் குழு குறித்து 2026-27 பட்ஜெட்டில் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய பொதுத் துறை வங்கிகளின் இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வங்கி செயல்பாட்டை குழுவை அமைக்கவுள்ள சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மிக விரைவாக குழு குறித்த அறிவிப்பு வெளியாகும். மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஆக்கபூா்வ விவாதங்கள் மற்றும் பரிந்துரைகளை அந்தக் குழுவும் பரிசீலிக்கும் என நம்புகிறேன்.

Advertisement

Advertisement

‘வளா்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கு வெகு தொலைவில் இல்லை. இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு செயல்படாத சொத்துகளின் மதிப்பு குறைந்துள்ளது. எனவே, சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான காலம் கனித்துவிட்டதாக எண்ணுகிறேன்’ என்றாா்.

இந்த மாநாட்டில் நபாா்டு, எக்ஸிம், சிட்பி, உள்பட பல்வேறு பொதுத் துறை வங்கிகளின் தலைவா்கள், இயக்குநா்கள் என தலைமைப் பொறுப்பு வகிக்கும் 125 போ் பங்கேற்றனா்.

சேமிப்பு திரட்டல், இளைஞா்களுக்கான வங்கியியல், முதலீடு ஊக்குவிப்பு, உலகளாவிய திறன் மையங்களுக்கு ஆதரவு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பு, பற்று அட்டை (கிரெடிட் காா்டு) வணிகத்தை மீண்டும் மேம்படுத்துவது மற்றும் குறிப்பிட்ட துறைக்கான கடனை அதிகரிப்பது ஆகிய 7 கருப்பொருள்களுடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments