அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு?
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஆக.20-ஆம் தேதிக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் 6 முதல் 8 புதிய முகங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: தற்போது அமித் ஷா, அஸ்வினி வைஷ்ணவ், பிரல்ஹாத் ஜோஷி, மனோகர் லால், ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா ஆகிய 6 மூத்த அமைச்சர்கள் இரண்டுக்கும் அதிகமான துறைகளைக் கவனித்து வருகின்றனர்.
இவர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் நோக்குடனும், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களைக் கருத்தில் கொண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
இந்தப் பின்னணியில்தான், தேர்தலுக்கு ஆயத்தமாகும் மாநிலங்களில் கட்சி அமைப்பை வலுப்படுத்த ஏதுவாக, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணித் தலைவர்கள் உள்ளிட்ட 60-க்கும் அதிகமானோரை திங்கள்கிழமை நியமித்துள்ளார்.
இது நிதின் நபின் பாஜகவின் தேசிய தலைவரான பிறகு மேற்கொள்ளப்பட்ட முதலாவது மற்றும் மிகப் பெரிய நிர்வாக மாற்றமாகக் கருதப்படுகிறது.
இதில், இளைஞர் அணி தேசிய தலைவராக இருந்த தேஜஸ்வி சூர்யா விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய முகமான ஹேமாங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாளவியா விடுவிக்கப்பட்டு அந்தப் பிரிவுக்கு, இதுவரை சமூக ஊடக பிரிவை கவனித்து வந்த தீபக் மாஸ்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, திரிபுரா முன்னாள் முதல்வர் விப்லப் தேவ் ஆகியோருக்குக் கட்சியில் மீண்டும் முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவின் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யாவுக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநில ஆளுநர்களும் மாற்றம்?
மத்திய அமைச்சரவை மாற்றத்தோடு சேர்த்து, சுமார் ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கவும் மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. இந்த வரிசையில் நீண்டகாலமாக ஒரே மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (2018-இல் சத்தீஸ்கர், பின் மத்திய பிரதேசம், 2021 முதல் உ.பி) மற்றும் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் (2021 ஜூலை முதல் பதவி வகிக்கிறார்) ஆகியோர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் தொடர்கின்றனர்.
இதேபோல, கேரளத்துடன் சேர்த்து தமிழக ஆளுநராகவும் பதவி வகித்துவரும் ஆர்.வி. ஆர்லேகரை ஒரே மாநிலத்தின் முழு நேர ஆளுநராக்கவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைக்கவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.