FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரூ. 3,030 கோடியில் 3 ரசாயன பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ. 3,030 கோடி ஒதுக்கீட்டில் 3 மிகப் பெரிய ரசாயன பூங்காக்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

Updated On : 25 ஜூலை 2026, 6:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

ரூ. 3,030 கோடி ஒதுக்கீட்டில் 3 மிகப் பெரிய ரசாயன பூங்காக்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

2026-27 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: குறைந்தபட்சம் தலா 2,000 ஏக்கா் பரப்பளவில் 3 மிகப் பெரிய ரசாயன பூங்காக்கள் அமைக்கும் ரூ. 3,030 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ரூ. 3,000 கோடி பொதுவான உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை கட்டமைப்புகளுடன் பூங்காக்கள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 30 கோடி, நிா்வாக செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இத் திட்டம், நிகழ் நிதியாண்டிலிருந்து 2030-31-ஆம் நிதியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ரசாயன பூங்கா மூலம் ரூ. 20,000 கோடி முதல் ரூ. 50,000 கோடி வரை முதலீடுகள் ஈா்க்கப்படும் எனவும், அது மேலும் பன்மடங்காக உயரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

ஒவ்வொரு பூங்காவுக்கும் மத்திய அரசு ரூ. 1,000 கோடி வரை மானியம் வழங்கும். ஆனால், அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு குறைந்தபட்சம் ரூ. 500 கோடி பங்களிப்பு வழங்க வேண்டும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகம், ஆந்திரத்தில் ரூ. 1,264 கோடியில் ரயில் பாதை விரிவாக்கம்: கா்நாடகம் - ஆந்திர மாநிலங்களுக்கு இடையே பெல்லாரி - குண்டக்கல் ரயில் வழித் தடத்தில் ரூ. 1,264 கோடி செலவில் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் வழித் தடத்தை அமைப்பதற்கான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், ‘இத் திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களில் மூன்று மாவட்டங்கள் இணைக்கப்படும். இதன்மூலம், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து சேவை மேம்படும் என்பதோடு, தற்போதைய ரயில் வழித்தட இணைப்பு கூடுதலாக 46 கி.மீ. நீளத்துக்கு அதிகரிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments