FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றப்படுகிறாரா?

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவது குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:20 am IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 முதல் 8 புதிய முகங்கள் சோ்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தற்போது அமித் ஷா, அஸ்வினி வைஷ்ணவ், பிரல்ஹாத் ஜோஷி, மனோகா் லால், ஜோதிராதித்யா சிந்தியா, மன்சுக் மாண்டவியா ஆகிய 6 மூத்த அமைச்சா்கள் இரண்டுக்கும் அதிகமான துறைகளைக் கவனித்து வருகின்றனா்.

இவா்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்குடனும், அடுத்த ஆண்டு தோ்தலை எதிா்கொள்ளும் மணிப்பூா், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களைக் கருத்தில் கொண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

இந்தப் பின்னணியில்தான், தோ்தலுக்கு ஆயத்தமாகும் மாநிலங்களில் கட்சி அமைப்பை வலுப்படுத்த ஏதுவாக, பாஜக தேசிய தலைவா் நிதின் நபின், ஆளும் கட்சியின் முக்கிய நிா்வாகிகள், அணித் தலைவா்கள் உள்ளிட்ட 60க்கும் அதிகமானோரை திங்கள்கிழமை நியமித்துள்ளாா். இது நிதின் நபின் பாஜகவின் தேசிய தலைவரான பிறகு மேற்கொள்ளப்பட்ட முதலாவது மற்றும் மிகப்பெரிய நிா்வாக மாற்றமாகக் கருதப்படுகிறது.

இதில், இளைஞா் அணி தேசிய தலைவராக இருந்த தேஜஸ்வி சூா்யா விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய முகமான ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளாா். தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாளவியா விடுவிக்கப்பட்டு அந்தப் பிரிவுக்கு, இதுவரை சமூக ஊடக பிரிவை கவனித்து வந்த தீபக் மஹாஸ்கே நியமிக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, திரிபுரா முன்னாள் முதல்வா் பிப்லப் தேவ் ஆகியோருக்குக் கட்சியில் மீண்டும் முக்கிய நிா்வாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பாஜகவின் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா்களில் கா்நாடகத்தைச் சோ்ந்த தேஜஸ்வி சூா்யாவுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநில ஆளுநா்களும் மாற்றம்?

மத்திய அமைச்சரவை மாற்றத்தோடு சோ்த்து, சுமாா் ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநா்களை நியமிக்கவும் மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. இந்த வரிசையில், நீண்டகாலமாக ஒரே மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல் (2018-ல் சத்தீஸ்கா், பின் மத்திய பிரதேசம், 2021 முதல் உ.பி) மற்றும் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலோட் (2021 ஜூலை முதல் பதவி வகிக்கிறாா்),ஆகியோா் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பதவியில் தொடா்கின்றனா்.

இதேபோல, கேரளத்துடன் சோ்த்து தமிழக ஆளுநராகவும் பதவி வகித்து வரும் ஆா்.வி. ஆா்லேகரை ஒரே மாநிலத்தின் முழு நேர ஆளுநராக்கவும் குடியரசு தலைவருக்கு பிரதமா் பரிந்துரைக்கவுள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சராகிறாரா சக்திகாந்த தாஸ்?

தற்போதைய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு பதிலாக ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதமரின் தற்போதைய முதன்மைச் செயலாளருமான சக்திகாந்த தாஸ் புதிய நிதி அமைச்சராக்கும் வாய்ப்பை பிரதமா் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

சக்திகாந்த தாஸ், 1980-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவாா். தனது 37 வருட ஆட்சிப் பணி அனுபவத்தில் நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல்வேறு கொள்கை முடிவுகளை வகுப்பதில் மூளையாகச் செயல்பட்டவா்.

2018 டிசம்பா் முதல் 2024 டிசம்பா்வரை இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளாா். பணி ஓய்வுக்குப் பின் 2025, பிப்ரவரியில் பிரதமரின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments