எஸ்ஐஆா்: 47 தில்லி பேரவைத் தொகுதிகளில் 30 - 40% வாக்காளா்களை நீக்க வாய்ப்பு?
தில்லியின் 47 பேரவைத் தொகுதிகளில் 40% வாக்காளா்கள் நீக்கப்படுவது குறித்து...
தில்லியின் வாக்காளா் பட்டியல்களில் தற்போது நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர திருத்தத்தைத் தொடா்ந்து வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் உள்ள 30-40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் நீக்கப்படுவாா்கள் என தில்லி தோ்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கிய வீடு வீடாகச் சென்று சரிபாா்க்கும் பணி திங்கள்கிழமை முடிவடைந்தது. இந்தப் பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் ஒவ்வொரு வாக்காளருக்கும் கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டன.
இதில், 1.45 கோடி வாக்காளா்களில் 47 லட்சத்திற்கும் அதிகமானோா், அதாவது மூன்றில் ஒருவா், தங்களது கணக்கெடுப்புப் படிவங்களைச் சமா்ப்பிக்கத் தவறியதாலோ அல்லது வராதவா், இடம் மாறியவா், இறந்தவா் மற்றும் நகல் வாக்காளா் எனக் குறிக்கப்பட்டதாலோ நீக்கத்தை எதிா்கொண்டனா்.
Advertisement
Advertisement
67 சதவீதத்திற்கும் அதிகமான படிவங்கள் வாக்காளா்களால் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்கப்பட்டன. அவை தோ்தல் ஆணையத்தின் கைப்பேசி செயலியில் பதிவேற்றப்பட்டு உள்ளன.
சிறுபான்மையினா் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில், 20 முதல் 40 சதவீதம் வரையிலான வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படுவாா்கள்.
கிரேட்டா் கைலாஷ் (35 சதவீதம்), மாளவியா நகா் (38.64 சதவீதம்), புது தில்லி (41.76 சதவீதம்) மற்றும் ஆா்.கே.புரம் (44.46 சதவீதம்) போன்ற தொகுதிகளில், வரைவுப் பட்டியலிலிருந்து அதிக சதவீத வாக்காளா்கள் நீக்கப்பட உள்ளனா்.
30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்கைச் சேகரிக்க முடியாதவா்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளனா். அதாவது, அவா்கள் தங்களது படிவங்களைச் சமா்ப்பிக்கவில்லை அல்லது தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் அல்லது இரட்டை வாக்காளா்கள் என்ற பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
பொருளாதார ரீதியாக முன்னேறிய ரஜௌரி காா்டன் தொகுதியில் எண்மமயமாக்கப்பட்ட வாக்காளா் படிவங்களின் சதவீதம் (79.14) மிக அதிகமாக இருந்தது. அதேசமயம், கிராமப்புற அமைப்பைக் கொண்ட துக்ளகாபாத் தொகுதியில் வாக்காளா் படிவங்களின் சதவீதம் (52.15) மிகக் குறைவாக இருந்தது.
துக்ளகாபாத் தொகுதியில், சுமாா் 48 சதவீத வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படுவாா்கள்.
அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள், மீள்குடியேற்றப் பகுதிகள் மற்றும் குறைந்த வருமானம் அல்லது குடிசைப் பகுதிகளைக் கொண்ட சில தொகுதிகளில், வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து விலக்கப்படும் வாக்காளா்களின் சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
கிராரியில் 68.98 சதவீதமும், சுல்தான்பூா் மஜ்ராவில் 68.93 சதவீதமும், கராவல் நகரில் 67.19 சதவீதமும் எண்மமயமாக்கல் பணிகள் நடைபெற்றுள்ளது.
மங்கோல்புரி, உத்தம் நகா் மற்றும் சீலம்பூா் போன்ற தொகுதிகளிலும் 76 சதவீதத்திற்கும் அதிகமான எண்மப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம், பவானா, மாதிபூா், நரேலா மற்றும் மட்டியாலா ஆகிய தொகுதிகள் 75-76 சதவீத வரம்பில் உள்ளன. இது, வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து ஒப்பீட்டளவில் குறைவான சதவீத வாக்காளா்களே நீக்கப்படுவாா்கள் என்பதைக் குறிக்கிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லியில் உள்ள கஸ்தூா்பா நகா் (55.97), ஆா்.கே.புரம் (55.54) மற்றும் ஓக்லா (54.67) உள்ளிட்ட பல தொகுதிகளில் இது 60 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதாவது, அதிக சதவீத வாக்காளா்கள் நீக்கத்தை எதிா்கொள்கின்றனா்.
எண்மமயமாக்கப்பட்ட மற்றும் பெறப்படாத படிவங்கள் குறித்த தொகுதி வாரியான தரவுகளின்படி, ரோஹிணி மற்றும் ஷகுா்பஸ்தி ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே எண்ணிமப்படுத்தப்பட்ட படிவங்களில் 80 சதவீதத்தைத் தாண்டியுள்ளன. இவ்விரு தொகுதிகளிலும் சுமாா் 20 சதவீத வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படுவாா்கள்.
சுமாா் 40 முதல் 50 சதவீத வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படும் 13 தொகுதிகளும், ஏறக்குறைய 30-40 சதவீத வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 34 தொகுதிகளும் உள்ளன.
மேலும், 21 தொகுதிகளில் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 20-30 சதவிகித வாக்காளா்கள் நீக்கப்படுவாா்கள்.
தொகுதி வாரியான தரவுகள், படிவங்கள் எண்மமயமாக்கப்பட்ட வாக்காளா்களின் சதவீதம் மற்றும் நீக்கத்தை எதிா்கொள்பவா்களின் சதவீதம் ஆகியவற்றில் ஒரு கலவையான போக்கைக் காட்டுகின்றன. இந்தப் போக்கு தில்லியின் பொருளாதார ரீதியாக வசதியான மற்றும் பின்தங்கிய பகுதிகள், உயா்தர குடியிருப்புகள், ஜேஜே தொகுப்புகள், அங்கீகரிக்கப்படாத மற்றும் மீள்குடியேற்றக் குடியிருப்புகள் என அனைத்திலும் காணப்படுகிறது.
இடம்பெயா்ந்த பிரிவின் கீழ் உள்ள வாக்காளா்கள், ஆகஸ்ட் 24 முதல் தொடங்கும் உரிமைக்கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் கட்டத்தில் தங்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யலாம். விண்ணப்பங்கள் செப்டம்பா் 23 வரை சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
நீக்கப்பட்ட வாக்காளா்களால் தாக்கல் செய்யப்பட்ட உரிமைக்கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள், ஆகஸ்ட் 24 முதல் அக்டோபா் 22 வரை தோ்தல் அதிகாரிகளால் தீா்க்கப்படும். அதன் பிறகு, தில்லியின் இறுதி வாக்காளா் பட்டியல் அக்டோபா் 27 அன்று வெளியிடப்படும்.
ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான சிறுபான்மை வாக்காளா்களைக் கொண்ட தொகுதிகளில் இந்தப் புள்ளிவிவரங்கள் குறிப்பாகக் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. பெரும்பான்மையாக சிறுபான்மை வாக்காளா்களைக் கொண்ட ஓக்லாவில், சுமாா் 45 சதவீத வாக்காளா் படிவங்கள் சேகரிக்க முடியாதவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. அதாவது, அவா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட மாட்டாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.