காதல், இழப்பு, பொதுவாழ்வு..! விரைவில் சோனியா காந்தியின் சுயசரிதை!
சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்ஸ்: அன்பின் பயணம்’... சுயசரிதை புத்தகம் பற்றி...
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) புத்தகம் நவம்பர் 10 அன்று வெளியாகவிருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி, 544 பக்கங்கள் கொண்ட சுயசரிதையான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.
ஆல்ஃபிரட் ஏ. நாஃப் பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்டு இந்த சுயசரிதை ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகம் மின்னூல் வடிவிலும் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் ஆடியோ எடிசனை வெளியிடவிருக்கிறது.
Advertisement
Advertisement
ஆல்ஃபிரட் ஏ. நாஃப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சுயசரிதை குறித்து சோனியா காந்தி தெரிவித்திருப்பதாவது:
“மனவேதனையும் இழப்பும்தான் என்னை அரசியல் எனும் பொது வாழ்க்கைக்குள் தள்ளியது. அதுவரை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நான் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தேன்.
என் வாழ்க்கையைப் பற்றி எழுதுவது எனக்கு எளிதாக அமைந்துவிடவில்லை. எனக்குள் இருந்த ஆழமான சிந்தனைகளையும் அனுபவங்களையும் நினைவில் கொண்டதால்தான் புத்தகமாக எழுத முடிந்தது. இந்தப் புத்தகம் எனது மனதின் வழியே பயணித்த மகிழ்ச்சி மற்றும் விரக்தியைப் பற்றி விவரிக்கிறது.
எனது குடும்பத்தைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால், உண்மையைச் சரியாகச் சொல்லும் பதிவுகள் மிகக் குறைவு. ஆனால், அரசியல் பிம்பங்களுக்கு அப்பால் உண்மையை வெளிப்படுத்தவே இந்நூல் முயல்கிறது. இந்தப் புத்தகம் அவர்களின் மனிதத்தன்மைக்கான அஞ்சலி” எனத் தெரிவித்துள்ளார்.
சோனியாவின் சுயசரிதைப் புத்தகத்தில், அவர் இத்தாலியில் பிறந்தது, போருக்குப் பின் இத்தாலியில் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றியும், ராஜீவ் காந்தியை மணந்த பின்னர் இந்திரா காந்திக்கு மருமகளாக மாறியதைப் பற்றியும் விவரிக்கிறது. மேலும், இத்தாலியின் சிறிய நகரில் கழிந்த அவரின் குழந்தை பருவம் பற்றியும் விவரித்துள்ளார்.
1965 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில், 19 வயது இளம்பெண்ணான சோனியா மைனோ, ராஜீவ் காந்தியைக் காதலிப்பதில் இருந்து இந்த புத்தகம் தொடங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். தொடர்ந்து, இந்திரா காந்தியுடன் அறிமுகம், ஹிந்தி மொழி கற்றல், புடவை அணிதல் மற்றும் இந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுதல் போன்றவற்றையும், காந்தி குடும்பத்தை உலுக்கிய துயரச் சம்பவங்களையும் இந்த புத்தகத்தில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தியின் சகோதரர் சஞ்சய் காந்தியின் விமான விபத்து, 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை, ராஜீவ் காந்தி பிரதமரானது, அவரின் படுகொலை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையை சோனியா காந்தி ஏற்றது, பிரதமர் பதவியை மறுத்தது போன்றவை இந்த புத்தகம் பேசுகிறது.
சோனியா காந்தியின் வாழ்க்கை, மன உறுதி, குடும்ப வரலாறு ஆகியவற்றின் தொகுப்பாக இந்த புத்தகத்தை வெளியிடுவதில் பெருமை கொள்வதாக ஆல்ஃபிரட் ஏ. நாஃப் பதிப்பகத்தின் நிர்வாகத் துணைத் தலைவரும் தலைமை ஆசிரியருமான ஜோர்டான் பாவ்லின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sonia Gandhi’s ‘Belongings: A Journey of Love’... an autobiography released on Nov 10
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.