FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரள போதைப் பொருள் நெட்வொர்க்! பட பாணியில் நெடுஞ்சாலையோரம் காரில் தொடங்கிய சம்பவம்...

கேரள போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டது, சாலையோரம் ஒரு காரில் தொடங்கியது பற்றி..

கேரள போதைப் பொருள் நெட்வொர்க் - IANS
பகிர்:

கேரள மாநில கலால் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் காரிலிருந்து 3.5 கிலோ எம்டிஎம்ஏ எனப்படும் சிந்தடிக் போதைப் பொருளை பறிமுதல் செய்தபோது, அது இவ்வளவு பெரிய நெட்வொர்க்கைப் பிடிப்பதற்கான அச்சாரம் என்பது கணிக்கமுடியாததாகவே இருந்தது.

போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கார், விசாரணையின் போக்கையே மாற்றியது. கடத்தலுக்காக காரின் உள்கட்டமைப்புகள் முற்றிலும் மாற்றப்பட்டு பல ரகசிய அறைகளைக் கொண்டிருந்துள்ளது. இந்த காரை மகாராஷ்டிரத்தில் மாற்றியருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 55 ஆயிரம் கிலோ மீட்டர், ஐந்து மாநிலங்கள், ஜெய்ப்பூருக்கு இரண்டு முறை, மகாராஷ்டிரத்துக்கு மூன்று முறை, பெங்களூருக்கு 3 முறை என அதிகாரிகள் சென்று வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

சுமார் 8 ஆயிரம் செல்போன் அழைப்புகள், 50 செல்போன் எண்கள், 160 செல்போன் கோபுரங்கள், 30 வங்கிக் கணக்குகள், 100 சமூக வலைத்தளக் கணக்குகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. 10 சுங்கச் சாவடிகள், 5 விடுதிகள், 8 வீடுகள் சோதனை நடத்தப்பட்டுள்ளன. ஏராளமானோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஏப்ரல் மாதம் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து 11 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, ராஜஸ்தான் எல்லை முதல் நேபாளம் வரை பல்வேறு இடங்களில் தேடுதல் பணியைத் தொடங்கியது. இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் தலைமறைவாக இருக்கிறார். ஒரு திரைப்பட பாணியில்தான் இந்த ஒட்டுமொத்த விசாரணையும் நடந்துள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மலப்புரத்தைச் சேர்ந்த ஷஃபீக், பாத்திமா இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால், முதற்கட்ட விசாரணையின்போதே, இவர்கள் வெறும் கொரியர் நபர்கள் போலத்தான் செயல்பட்டவர்கள், உண்மையான குற்றவாளிகள் வேறு எங்கோ இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்துவிட்டனர்.

பிறகு, காரின் உரிமையாளர் உமர் ஃபரூக்கை விசாரணைக்கு அழைக்கிறார்கள். ஆனால், அவர் ரூ.5 லட்சம் லஞ்சம் தருவதாக அதிகாரிகளிடம் கூற, அடுத்த நாள் கைதாகிறார்.

அவரின் செல்போன் அழைப்புகளைக் கொண்ட திரூரைச் சேர்ந்த பிலால் (28) கைது செய்யப்பட்டதே பெரிய சவால். சிம் இல்லாத வாட்ஸ்ஆப் மூலம் பேசுவது, வைஃபை நெட்வொர்க் மட்டுமே பயன்படுத்துவது போன்றவை அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதை சவாலாக மாற்றியது.

பிறகு, அவர் மகாராஷ்டிரத்தில் இருப்பது தெரிந்து, தில்லி சென்று நேபாளம் தப்பிச் செல்வதற்கு முன்பு கைது செய்தனர்.

பிலால், ஷபீக் இருவரும் போதைப் பொருள் கடத்தலில் வரும் லாபத்தை அப்படியே கடத்தல் வேலைகளில் முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டி வந்துள்ளனர். இப்போதுதான் பிலாலுக்கு சீனாவில் தயாரிப்பட்ட துப்பாக்கிகளை வாங்கி விற்கும் தொழிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஜெய்ப்பூருக்கு விரைகிறார்கள் அதிகாரிகள்.

போகும் வழியெங்கும் பல ஆதாரங்களைத் திரட்டுகிறார்கள். தேடிச் சென்ற ஹிரென் கார்த்திகேயன் தப்பிடியோடிய நிலையில், அவர்களது உதவியாளர்கள் மேற்கு வங்கம் சென்று நேபாளம் தப்ப திட்டமிட்டது கண்டுபிடிக்கப்படுகிறது. உடனே அதிகாரிகள் சிலிகுரி விரைகிறார்கள் சுற்றுலாப் பயணிகள் போல.

ஹிரன் செல்போனும் ஆர்மேனிய நம்பரில் வைஃபை மூலம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை தமிழகம் பக்கம் திரும்புகிறது. தென்காசியைச் ச்ரந்த ராம்சியா என்ற பெண்ணின் வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரிந்ததும் பெண் அதிகாரிகள், அரசு திட்ட உதவி பற்றி சொல்வது போல பக்கத்து வீட்டுக்குச் சென்று பேசி, ராம்சியாவைக் கைது செய்கிறார்கள்.

அவரது வீட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தல் விவரங்கள் கொண்ட நோட்டு கைப்பற்றப்படுகிறது. அதன் மூலம், நைஜீரியாவைச் சேர்ந்த நபருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தொடர்ந்து கேரளத்தில் மிகப்பெரிய போதைப் பொருள் நெட்வொர்க், விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்றும், கேரளத்தில் நடந்த சோதனையில் ஒரு குழந்தையுடன் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காரின் டேஷ்போர்டில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள நெடுஞ்சாலையில் தொடங்கி 55 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து மிகப்பெரிய நெட்வொர்க் கைதாகியிருக்கிறது.

summary

Kerala drug network! An incident that began in a car by the highway, straight out of a movie...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments