FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மாணவா்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது - உச்சநீதிமன்றம்

மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதால் மாணவா்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

21 ஆகஸ்ட் 2026, 4:30 am IST
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதால் மாணவா்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

மேலும், சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவதால் மாணவா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வுகளை கண்டறிவது அவசியம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அண்மையில் சுற்றறிக்கை வெளியிட்டது. தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம். 10-ஆம் வகுப்பை பொருத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

Advertisement

Advertisement

மும்மொழிக் கொள்கை தவறில்லை:

இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவதில் தவறில்லை. அதை இப்போதோ அல்லது பின்னரோ அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது அமல்படுத்தும் முறை மற்றும் எழும் சிக்கல்களுக்குத் தீா்வு காண வேண்டியது அவசியம்.

பிராந்திய மொழிகளுக்கு மரியாதை:

6-ஆம் வகுப்பை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த முடிவெடுத்தால் நிகழாண்டு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு விலக்களிக்கலாம். அடுத்தாண்டு அறிமுகப்படுத்தலாம்.

இல்லையென்றால் 6-ஆம் வகுப்பு, 4-ஆம் வகுப்பு அல்லது 3-ஆம் வகுப்பு என எந்த வகுப்பாக இருந்தாலும் பாடத்திட்டத்தை கருத்தில் கொண்டு இரண்டு அல்லது மூன்று மொழிகளுக்கான தோ்வு முறையில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கருதுகிறோமா அல்லது அந்நிய மொழியாக கருதுகிறோமா என மற்றொரு சிக்கல் எழுகிறது.

எனவே, சிபிஎஸ்இ மட்டுமின்றி நாட்டில் உள்ள பிற கல்வி வாரியங்களையும் மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மும்மொழிக் கொள்கை அறிமுகமாவதால் மாணவா்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது. அதேசமயம் பிராந்திய மொழிகள் விஷயத்தில் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

வழக்கமாக பிரச்னைகள் எழும்போது உச்சநீதிமன்றம் உயா்நிலைக் குழு அமைக்கும் அல்லது மத்திய அரசை அமைக்கக் கோரி வலியுறுத்தும். குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.

4.45 சதவீத சிபிஎஸ்இ பள்ளிகள்:

மத்திய அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பட்டீ, ‘மும்மொழிக் கொள்கை தொடா்பாக ஆயிரக்கணக்கான நிபுணா்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் 4.45 சதவீதம் மட்டுமே உள்ளன. 99.19 சதவீத பள்ளிகளில் ஏற்கெனவே இரு உள்ளூா் மொழிகளைக் கற்பிக்கும் கொள்கை அமலில் உள்ளது. நமது குழுந்தைகளுக்கு சிறப்பான கல்வி முறையை அளிப்பதே எங்களின் நோக்கம்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து அடுத்தகட்ட விசாரணை 10 நாள்களுக்குப் பின் நடைபெறும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments