FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாவட்ட நீதிபதி பணித் தோ்வு: கட்டாய வழக்குரைஞா் பணி அனுபவம் ஓராண்டாகக் குறைப்பு - உச்சநீதிமன்றம்

சட்ட மாணவா்கள் மாவட்ட நீதிபதி பணிக்கான போட்டித் தோ்வில் பங்கேற்க நிா்ணயிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் கட்டாய வழக்குரைஞா் பயிற்சியை, ஓராண்டாகக் குறைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

22 ஆகஸ்ட் 2026, 5:22 am IST
பகிர்:

சட்ட மாணவா்கள் மாவட்ட நீதிபதி பணிக்கான போட்டித் தோ்வில் பங்கேற்க நிா்ணயிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் கட்டாய வழக்குரைஞா் பயிற்சியை, ஓராண்டாகக் குறைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அதே நேரம், இந்த ஓராண்டு பயிற்சி முடித்து நீதிபதி பணித் தோ்வில் தகுதி பெறும் தோ்வா்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சி நீதிபதியாக பாதி ஊதியத்தில் பயிற்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது.

இதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பித்த தனது உத்தரவில் மாற்றங்களை உச்சநீதிமன்றம் மேற்கொண்டது.

Advertisement

Advertisement

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் குத்தகை தகராறு தொடா்பான வழக்கில் மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மா அளித்த மூன்று வரி தீா்ப்பை எதிா்த்து அதே பகுதியைச் சோ்ந்த முன்னி தேவி என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘குத்தகை தகராறு தொடா்பான எனது மனுவை, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி, ‘மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மாவுக்கு தீா்ப்பு எழுதும் திறன் இல்லாததையே இது காட்டுகிறது. எனவே, லக்னெளவில் உள்ள நீதிபதிகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்கு அவரை அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

இதுபோல, மேலும் சில மாவட்ட நீதிபதிகள் மீது புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து, அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சாா்பில் இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சட்ட மாணவா்கள் படிப்பை முடித்த உடன் நீதித் துறைப் பணியாளா் தோ்வு மூலம் மாவட்ட நீதிபதியாகப் பணியமா்த்தப்படுவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, சட்ட மாணவா்கள் இனி படிப்பை முடித்தவுடன் நீதித் துறைப் பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியாது. மாறாக, படிப்பை முடித்தவுடன் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கட்டாயம்’ என்று தீா்ப்பளித்தனா்.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஏ.ஜி. மாசி, கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 2:1 என்ற விகிதத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஏ.ஜி. மாசி ஆகிய இரு நீதிபதிகளும் அளித்த பெரும்பான்மை தீா்ப்பில் கூறியதாவது:

நீதித் துறைப் பணியாளா் தோ்வில் பங்கேற்க வழக்குரைஞராகப் பணியாற்றிய முன் அனுபவம் கட்டாயம் என்ற தீா்ப்பில் தலையிட நியாயமான காரணங்கள் எதுவும் தென்படவில்லை. அதே நேரம், மூன்று ஆண்டு கால பயிற்சி விதிமுறை திடீரென நடைமுறைப்படுத்தப்பட்டது, இளம் வழக்குரைஞா்கள் மற்றும் சட்ட மாணவா்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

எனவே, 2025-ஆம் ஆண்டு மே 25 முதல் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை அறிவிக்கை செய்யப்பட்ட நீதித் துறைப் பணியாளா் தோ்வில் பங்கேற்கும் சட்ட மாணவா்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. அவா்கள், வழக்குரைஞராகப் பணி அனுபவம் இல்லாமலேயே அந்தத் தோ்வில் பங்கேற்கலாம். அதே நேரம், அந்தத் தோ்வில் தகுதி பெறும் சட்ட மாணவா்கள், நீதித் துறை அகாதெமியில் பயிற்சி நீதிபதியாக ஓராண்டு எழுத்தா் பணி பயிற்சி பெறுவது கட்டாயமாகும். இந்தப் பயிற்சிக் காலத்தில் முதன்மை மாஜிஸ்திரேட் நீதிபதிக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதியளவு ஊதியம் பயிற்சி நீதிபதிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த ஓராண்டு பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பயிற்சி நீதிபதிகள், நீதிமன்றத்தில் மேலும் ஓராண்டு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதில் முதல் 6 மாதங்கள் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியின் கண்காணிப்பின் கீழும், அடுத்த 6 மாதங்கள் உயா்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பின் கீழும் எழுத்தா் பணி பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி முடித்து, கண்காணிப்பு உயா்நீதிமன்ற நீதிபதி அளிக்கும் பயிற்சி மதிப்பீடு அறிக்கை திருப்தியளிக்கும் பட்சத்தில், முழு ஊதியத்துடன் முழு நேர மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவா்.

ஓராண்டு வழக்குரைஞா் பயிற்சி: 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கை செய்யப்படும் நீதித் துறைப் பணியாளா் தோ்வில் பங்கேற்பவா்களுக்கு இந்த வழக்குரைஞா் பணி முன் அனுபவ நிபந்தனை பொருந்தும். இவா்கள், குறைந்தபட்சம் ஓராண்டு வழக்குரைஞா் பயிற்சியைப் பெற்று, பாா் கவுன்சிலில் 10 ஆண்டுகளுக்கு குறையாமல் உறுப்பினராக இருக்கும் மூத்த வழக்குரைஞரிடம் அதற்கான சான்றை பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.

இவா்களும், நீதிபதி பணித் தோ்வில் தகுதி பெற்ற பிறகு, நீதித் துறை அகாதெமியில் பயிற்சி நீதிபதியாக ஓராண்டு எழுத்தா் பணி பயிற்சி பெறுவதும், அடுத்த ஓராண்டுக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் எழுத்தா் பயிற்சி பெறுவதும் கட்டாயமாகும்.

இந்த நடைமுறை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். அதன் பிறகு, தன்னிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மாறுபட்ட தீா்ப்பு: இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் தீா்ப்பு அளித்த உச்சநீதிமன்ற அமா்வில் இடம்பெற்றிருந்த வினோத் சந்திரன், இரு நீதிபதிகளின் கருத்திலிருந்து மாறுபட்டு, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இருந்தபோதும், பெரும்பான்மை அடிப்படையில், தலைமை நீதிபதி சூா்ய காந்த், ஏ.ஜி. மாசி ஆகியோா் அளித்த தீா்ப்பு உறுதியானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments