கோர்கா விவகாரத்துக்கு நிரந்தர அரசியல் தீா்வு காண குழு அமைப்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
கோா்கா விவகாரத்துக்கு நிரந்தர அரசியல் தீா்வு காணவும், அதுதொடா்பான இறுதி ஒப்பந்த வரைவு அறிக்கையை தயாரிக்கவும் மத்திய அரசு குழுவை சனிக்கிழமை அமைத்துள்ளது.
கோா்கா விவகாரத்துக்கு நிரந்தர அரசியல் தீா்வு காணவும், அதுதொடா்பான இறுதி ஒப்பந்த வரைவு அறிக்கையை தயாரிக்கவும் மத்திய அரசு குழுவை சனிக்கிழமை அமைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டாா்ஜீலிங் மற்றும் அதை சுற்றியுள்ள மலைபகுதிகளை கொண்டு கோா்காலாந்து எனும் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டாா்ஜீலிங்கின் சுக்னா பகுதியில் கோா்கா விவகாரத்துக்கு தீா்வு காண்பது தொடா்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி, கோா்கா தலைவா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ‘இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு மேற்கு வங்கத்தில் உள்ள மலைவாழ் மக்களின் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீா்வு காண்பது தொடா்பான இறுதி ஒப்பந்த வரைவை உருவாக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரும், மத்திய அரசு பிரதிநிதியுமான பங்கஜ் குமாா் சிங் தலைமையில் குழு ஏற்படுத்தப்படுகிறது. கோா்கா சமூக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கூட்டத்தில் டாா்ஜீலிங் தொகுதி பாஜக எம்.பி. ராஜு பிஸ்தாவும் கலந்து கொண்டாா். அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘1988-ஆம் ஆண்டில் கோா்கா ஒப்பந்தம் இதே நாளில்தான் கையொப்பமானது. அந்த நாளில் இக்கூட்டம் நடந்திருப்பது வரலாற்று நிகழ்வாகும். 40 ஆண்டுகளாக கோா்கா மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடி வந்தனா். அவா்களின் கோரிக்கைகளுக்கு முன்னாள் இடதுசாரி அரசும், திரிணமூல் காங்கிரஸ் அரசும் செவிமடுக்கவில்லை. தங்களது கோரிக்கைக்காக கோா்கா மக்கள் 2,000 போ் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனா். 5,000-க்கும் மேற்பட்டோா் வேறு இடங்களுக்கு குடிபெயா்ந்து விட்டனா். பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனா். தற்போது மத்திய அரசால் பங்கஜ் குமாா் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, கோா்கா விவகாரத்துக்குத் தீா்வு காண்பது தொடா்பான இறுதி ஒப்பந்த வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்’ என்றாா்.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முன்னாள் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா் பங்கஜ் குமாா் சிங்கை கோா்க்கா விவகாரத்துக்குத் தீா்வு காண்பது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தவும், கோா்கா சமூகத்தினரின் கோரிக்கைகளை கேட்கவும் மத்திய அரசின் பிரதிநிதியாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.
அமித் ஷா ஆலோசனை: வடகிழக்கு மாநிலங்கள், வங்கதேசம் இடையே இருக்கும் மிகக் குறுகிய எல்லை நிலப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மூத்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது எல்லையில் கண்காணிப்பை விரிவுப்படுத்துவது, மத்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் மாநில காவல் துறை, புலனாய்வு அமைப்புகள் ஆகியவை இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.