மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்
தென்மண்டலக் குழுவின் 31-ஆவது கூட்டம் பற்றி....
நமது சிறப்பு நிருபர்
சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை (ஆக. 20) நடைபெறவுள்ள தென்மண்டலக் குழுவின் 31-ஆவது கூட்டத்தில் மாநில நதிநீர்ப் பங்கீடு, விமானப் போக்குவரத்து திட்டங்கள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ள "டீம் பாரதம்' (பாரத அணி) என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் மண்டலக் குழுக்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
Advertisement
Advertisement
"வலிமையான மாநிலங்களே வலிமையான தேசத்தை உருவாக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், தீர்வு காணவும் இந்த மண்டலக் குழுக்கள் சிறந்த தளமாக செயல்படுகின்றன.
மாநாட்டின் விவரம்: மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-இன் சட்டப் பிரிவுகள் 15 முதல் 22-இன் கீழ், தென்மண்டலக் குழு உள்பட ஐந்து மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், தென்மண்டலக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுகிறார். சுழற்சி அடிப்படையில், இந்த முறை தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இக்குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகம், தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இரு மூத்த அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும், அரசு தலைமைச் செயலர்கள், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, தலைமைச் செயலர்கள் நிலையிலான குழு, மாநிலங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஆராய்ந்து, இறுதி அம்சங்களை மண்டலக் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கும். 2014, ஜூன் முதல் இதுவரை பல்வேறு மண்டலக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிலைக் குழுக்களின் சார்பில் 69 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை நடத்தப்படும் மண்டலக் குழுக் கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள், ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் தொடர்புடைய விவகாரங்கள், நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம், விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான பொதுவான மாநில விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்றார் அவர்.
யார், யார் வருகை?: மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விகரமர்கா, புதுச்சேரி தலைமைச் செயலர் சரத் சௌஹான் ஆகியோர் மாநாடு நடைபெறவுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு புதன்கிழமை இரவு வருகை தந்தனர்.
கர்நாடக, தமிழக முதல்வர்கள் சந்திப்பு...
காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுகளின்படி நீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், அந்த மாநில முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூரில் சந்திக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், இரு மாநிலங்களிலும் பரஸ்பரம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் அறிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்களை அந்த மாநில வனத் துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயங்கள் தொடர்பாக கர்நாடக முதல்வருடன் தமிழக முதல்வர் நேரடியாகப் பேசுவதற்கு தென்மண்டலக் குழுக் கூட்டம் இயல்பான வாய்ப்பை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.