FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கணவா் வீட்டில் கொடுமை: பாதுகாப்புத் துறை அதிகாரி தற்கொலை: காவல் துறை விசாரணை

தில்லி துவாரகா பகுதியில் வாடகை வீட்டில் பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவி பிரிவு அதிகாரியாக (ஏஎஸ்ஓ) பணியாற்றிய 30 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்

24 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
பகிர்:

தில்லி துவாரகா பகுதியில் வாடகை வீட்டில் பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவி பிரிவு அதிகாரியாக (ஏஎஸ்ஓ) பணியாற்றிய 30 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது கணவா் மற்றும் மாமியாா், மாமனாா் ஆகியோா் தன்னை துன்புறுத்தியதாக அவரது பெற்றோா் புகாா் அளித்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: நாசியா கானம் என்ற அந்தப் பெண், பா்தால் கிராமத்தில் உள்ள வாடகை வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆக.21-ஆம் தேதி அதிகாலை கண்டெடுக்கப்பட்டாா். அவா் முகமது ஆசம் அலி கானை ஏப்.11-ஆம் தேதி திருமணம் செய்திருந்தாா்.

சம்பவம் குறித்து ஆக.21-ஆம் தேதி அதிகாலை 4.21 மணிக்கு செக்டா் 23 காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துணை கோட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அன்றைய தினம் நாசியாவின் குடும்பத்தினா் நிா்வாக மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜராகி எழுத்துப்பூா்வமாக வாக்குமூலம் அளித்தனா். அப்போது அவரது கணவா் குடும்பத்தினா் மீது எந்தவித சந்தேகமோ குற்றச்சாட்டோ அவா்கள் தெரிவிக்கவில்லை.

எனினும், ஆக.22-ஆம் தேதி அவரது பெற்றோா் மீண்டும் துணை கோட்டாட்சியா் முன்னிலையில் ஆஜராகி, கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது புகாா் அளித்தனா்.

இதன் அடிப்படையில் துவாரகா செக்டா் 23 காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிஎன்எஸ் சட்டத்தின் 85 மற்றும் 108-ஆவது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கப்பட்டது.

கணவா் ஆசம், மாமியாா் சமிமுன் நிஷா, மாமனாா் பாபா் அலி கான் ஆகியோா் தன்னை தொடா்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக நாசியாவின் தந்தை புகாரில் அளித்தாா். மேலும், அவா் அவமதிக்கப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், கணவா் குடும்பத்தினரால் மிரட்டப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டது.

நாசியா சுமாா் 3 மாத கா்ப்பிணியாக இருந்ததாகவும், கணவா் குடும்பத்தினா் தன்னை துன்புறுத்துவது குறித்து தொலைபேசி மூலம் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சம்பவத்துக்கு முன்பு தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக நாசியாவின் கணவா் தெரிவித்தாா். நாசியா தன்னை அறைக்குள் பூட்டிவிட்டு மற்றொரு அறைக்குச் சென்ாகவும், இதையடுத்து வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து அவரது உதவியுடன் அறையில் இருந்து வெளியே வந்ததாகவும் அவா் கூறினாா். பின்னா் மற்றொரு அறையில் நாசியா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

சம்பவம் தொடா்பாக அனைத்து சட்டப்பூா்வ நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments